ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவனும் நானும் பெரியாரின் பேரன்கள் தான் என்று கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதைத் தொடர்ந்து இரண்டரை லட்சம் வாக்காளர்களை கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகள் தங்கள்து வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று மாலை 5 மணி அளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலையில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-
சின்னம், கொடி , கட்சி எல்லாம் தாண்டியது தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்தற்கு பல சான்றுகள் இருக்கிறது. இன்று இந்தியாவிலும் அது நடந்து கொண்டு இருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது. அவரும் பெரியார் பேரன். நானும் பெரியாரின் பேரன்.
என் பயணத்தை பாருங்கள் எனது பாதை புரியும். பல விமர்சனங்களை கடந்து, சரியான பாதை என்று தான் வந்துள்ளேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்கோ, ஆதாயத்திற்காகவோ அல்ல. நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். நம் நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அதற்கு என் ஆதரவை கொடுக்க வேண்டியது இந்தியனாக என் கடமை. நாம் கட்சிக்காக என்பதை விட அறத்தின் சார்பாக வாக்களிக்க போகிறோம் என நினைத்து கொள்ளுங்கள்.
இந்த நாட்டிற்கான கடமையை செய்வதற்காக தவிர, இது தமிழர்கள் தன்மானத்தை நிரூபிக்க வேண்டிய தேர்தல். அதில் நிரூபிக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. நாங்கள் உங்களுக்காக போராடுகிறோம். நாங்கள் முன்னணி போராளிகள். அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முக்கியமானவர். உங்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம் என்று நீங்கள் உணர வேண்டும். எங்களை அடக்கி ஆள முடியாது என்று தமிழகம் இப்போது இருக்கும் மையத்துக்கு (மத்திய அரசுக்கு) சொல்ல வேண்டும்.
இங்கே தர்க்கரீதியான சிந்தனை அனைவருக்கும் உண்டு. அதற்கு யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்லை. அதற்கு பெரிய உதாரணம் பெரியார்தான். இன்று அதிகமாக இளைஞர்கள் வாசிப்பது பெரியார் எழுதிய புத்தகங்கள். தர்க்கரீதியான சிந்தனை தமிழர்களுக்கு உண்டு, அந்த மூளையை நீங்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும். இந்தியாவின் பலம் அதன் பன்முக தன்மை. அதை ஒரு வண்ணமாக, ஒரு எண்ணமாக மாற்றிவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் என்று சொல்கிறபோது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த நாட்டுக்கு தேவை. என்றென்றும் தேவை. அதுவும் இப்போது மிக முக்கியமாக தேவை. அதனால் நான் இங்கே வந்திருக்கிறேன்.
பல முறை என் கருத்தை சொல்லி இருக்கிறேன். திடீர் என்று கருத்து மாற்றம் செய்யவில்லை. அதே கருத்து உடையவர்களுடன் இணைந்திருக்கிறேன். ஆபத்து காலத்தில் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இப்போது ஆபத்துகாலம். அதனால்தான் என்னுடைய வரைகோடுகளை எல்லாம் கடந்து வந்து இங்கே கை குலுக்கி இருக்கிறேன். இது லாபத்துக்காக வைத்திருக்கும் கூட்டணி அல்ல. அப்படி வந்திருந்தால் எனக்கு விஸ்வரூபம் படம் பிரச்சினை வந்தபோதே நான் வந்திருக்கலாம். அது எனது தனிப்பட்ட பிரச்சினை. இப்போது நான் வந்திருப்பது நாட்டுக்கான பிரச்சினை. அதனால் இங்கே வந்திருக்கிறேன். என்னைப்போல் நீங்களும் முன்வந்து கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்நாடு தனி சிந்தனை உள்ள நாடு என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் நிரூபிக்க வேண்டும். அதற்கான அரிய வாய்ப்பினை காலமும் கழகமும் வழங்கி இருக்கிறது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். அவருடன் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருந்தார்.