மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கு சிவசேனா பெயர், சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சி இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கணிசமான எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது. இதையடுத்து சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. இதனிடையே தாங்கள் தான் உண்மையான சிவசேனா என முதல்வர் ஷிண்டே மற்றும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகிய இரு தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், சிவசேனா பெயர், கட்சியின் வில் அம்பு சின்னம் ஆகியவற்றை ஷிண்டே அணிக்கு என கடந்த 17ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. சிவசேனா கட்சிக்கு ரூ 186 கோடிக்கு அசையும் சொத்துகளும் அசையா சொத்துகளும் இருக்கின்றன. அத்துடன் வங்கிக் கணக்குகளில் 148.86 கோடி ரூபாய் உள்ளது. சிவசேனா கட்சியின் சொத்துகள் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி சிவசேனா கட்சியின் சொத்துகள், பணம் முழுவதும் தற்போது ஷிண்டே அணிக்கு செல்கிறது.
இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக உத்தவ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் நேற்று முறையிட்டார். மனுவை உடனடியாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதை தலைமை நீதிபதி ஏற்கவில்லை. உத்தவ் தரப்பு மனு குறித்து இன்று முடிவு செய்யப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக உத்தவ், ஷிண்டே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று மாலை நடைபெற்ற விசாரணையின் போது தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு உடனே தடைவிதிக்க முடியாது. இது தொடரபாக தேர்தல் ஆணையம் மற்றும் ஷிண்டே கோஷ்டி 2 வாரத்தில் உரிய பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தின் முடிவின் அடிப்படையில் வேறு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவும் கூடாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.