ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோதான் என்றும் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் ஏற்றுகொள்வோம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பினை வழங்கியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கவுரவர்களின் சூழ்ச்சி தோல்வியடைந்துள்ளது. பாண்டவர்களுக்கே இறுதியில் வெற்றி. நாங்கள் சட்டப்படி சென்று கொண்டு இருக்கிறோம். எந்த சட்ட மீறலும் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக உள்ளது. ஓ பன்னீர் செல்வம் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோதான். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் இவர்களை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.
அதிமுக உடையவில்லை. பிளவு இல்லை, சுணக்கம் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த அதே எழுச்சியுடன் தான் அதிமுக இருக்கிறது. ஓபிஎஸ்சை எப்படி அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியும். தலைமைக் கழகத்தை எட்டி உதைத்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவரை தொண்டன் எப்படி ஏற்றுக்கொள்வான். கருணாநிதியை புகழ்வதை எப்படி ஏற்றுக்கொள்வான். திமுகவின் பி டீமாக இருப்பவரை எப்படி ஏற்றுக்கொள்வான். இவ்வாறு அவர் கூறினார்.