திமுக எம்.பி ஆ.ராசாவின் அண்ணன் தங்களது சொத்துகளை அபகரித்துவிட்டதாக குற்றம்சாட்டி 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக துணை பொதுச் செயலாளராகவும், நீலகிரி எம்.பியாகவும் இருந்து வருபவர் ஆ.ராசா. இவரது அண்ணன், பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் அங்கு சலவை தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளை அபகரிக்க முயற்சி செய்து வருவதாக புகார் கிளம்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆ.ராசாவின் சகோதரர் தங்கள் நிலத்தை அபகரிப்பதாகவும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, மண்ணெண்னெயை தங்கள் உடலில் ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்றனர். போலீசாரும் அங்கே இருந்த பத்திரிகையாளர்களும் துரிதமாகச் செயல்பட்டு, தீக்குளிக்க முயன்ற குடும்பத்தை மீட்டுள்ளனர். தாங்கள் சலவைத் தொழிலாளிகள் என்றும், ஆ.ராசாவின் சகோதரர் தங்களின் நிலத்தை பறித்துக் கொண்டு விட்டார் என்றும் அதனால் வழக்கறிஞர்களை நாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர முயன்ற நிலையில், வழக்கறிஞர்களையும் வளைத்து போட்டுக் கொள்கிறார் ஆ.ராசாவின் சகோதரர் என்றும், இதனால் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் அழுது புலம்பியுள்ளனர் அந்த குடும்பத்தினர்.
இது தொடர்பான வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக என்றாலே தமிழ்நாட்டில் ஊழல் – ரவுடியிசம் தான் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.