தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்னையான முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை பெற மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று கம்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில் வைகோ பேசினார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன் மகன் ஆர்.சுபாஷ் சுந்தர் – ஏ.பவ்யா திருமணத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி நடத்தினார். விழாவில் அவர் பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை தடுக்க கேரள அரசு பல்வேறு இடையூறுகளை தொடர்ந்து செய்து வருகிறது. இதைத் தடுக்க 10 லட்சம் பேர்களை திரட்டி போராட்டம் நடத்தினோம். அதற்காக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 628 கிராமங்களுக்கு நடந்தே சென்று பிரசாரம் செய்தேன். எனது கால்படாத கிராமம் இங்கே கிடையாது. சில நாள்களுக்கு முன்பு கூட கேரள அமைச்சர் புதிய அணையை கட்டுவோம் என்று கூறியுள்ளார். அதற்காக மதிமுக சார்பில் மீண்டும் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை மீட்க போராட்டம் கம்பம் பகுதியில் நடைபெறும்.
அதேபோல் தேவாரம் நியூட்ரினோ திட்டம் மிகப்பெரிய ஆபத்தானது. இதனால் இடுக்கி மற்றும் பென்னிகுயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணைகளுக்கும் ஆபத்து ஏற்படும். இந்த திட்டத்தை தடுக்க தொடர் போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.