பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தனது கனடா நாட்டு குடியுரிமையை துறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியா தொடர்பான கருத்துகளை அவர் தெரிவிக்கும்போது நெட்டிசன்கள் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்து வரும் நிலையில், ‛‛இந்தியா தான் எனக்கு எல்லாமே. நான் கனடா நாட்டு பாஸ்போர்ட்டை துறக்க முடிவு செய்து விண்ணப்பம் செய்துள்ளேன்” என அக்சய் குமார் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகராக இருப்பவர் அக்சய் குமார். இந்தி படங்களில் அதிகமாக நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றார். இவர் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 2019ம் ஆண்டு நேர்க்காணல் செய்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். மேலும் அடிக்கடி அவர் கூறும் கருத்துகள் டுவிட்டரில் விவாதத்தை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் தான் அக்சய் குமாரை சுற்றி நீண்டகாலமாக ஒரு சர்ச்சை இருந்து வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அக்சய் குமார் வாக்களிக்காததாக தகவல்கள் பரவியது. இதற்கு அவர் கனடா குடியரிமை பெற்றுள்ளதே காரணம் என கூறப்படுகிறது. அன்று முதல் இன்று வரை கனடா குடியுரிமையை பெற்றவர் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்தியா பற்றிய கருத்துகளை அவர் கூறும்போது நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் தான் அக்சய் குமார் தனது கனடா குடியுரிமையை விட்டு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி அக்சய் குமாரே உறுதிப்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‛இந்தியா தான் எனக்கு எல்லாமாக இருக்கிறது. இந்தியா மீதான அன்பை நிரூபிக்கும் வகையில் கனடா குடியுரிமை நான் துறக்க உள்ளேன். நான் பணம் சம்பாதித்தது இந்தியாவில் தான். நான் இந்தியாவில் இருப்பது நான் செய்த பாக்கியம். இதனால் கனடா நாட்டு குடியுரிமையை துறக்க விண்ணப்பம் செய்துள்ளேன் என்றார்.
மேலும் கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றதற்கான காரணம் பற்றியும் அவர் விளக்கம் அளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், 1990ம் ஆண்டு காலக்கட்டத்தில் எனது 15க்கும் மேற்பட்ட படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் நான் மனமுடைந்து போனேன். அப்போது கனடாவில் இருந்த என் நண்பன் அங்கு அழைத்தான். வேலை நிமித்தமாக அங்கு சென்றேனர். அப்போது குடியுரிமையை பெற்றேன். இந்த வேளையில் 2 படங்கள் ரிலீசுக்கு காத்திருந்தன. இரண்டும் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் எனது நண்பர் திரும்ப போ என்றார். மேலும் படங்கள் கிடைத்தன. இந்த வேளையில் என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருப்பதை மறந்துவிட்டேன். இதனால் பாஸ்போர்ட்டை மாற்ற வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இப்போது எனது பாஸ்போர்ட்டை மாற்ற விரும்பி விண்ணப்பம் செய்துள்ளேன்” என்றார்.