திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணம் விசிகவிற்கு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. மேலும் பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் கூறியிருக்கிறது. இதன் மூலம் அதிமுக எடப்பாடி பழனிசாமி கைகளுக்குள் முழுமையாக சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். தனது டுவிட்டர் பக்கத்தில், அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வை தொடங்கிய பழனிசாமி, இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்கு மட்டுமே பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே என்று குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் எதற்காக வாழ்த்து கூறினார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியதன் பின்னணி குறித்து திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறியதாவது:-
அதிமுகவுக்குள் ஏற்பட்ட உட்கட்சி சிக்கலுக்கு தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வெற்றி கிடைத்துள்ளது என்று சொல்லலாம். ஆனால், அது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும் என்று சொல்ல முடியாது. இரட்டை தலைமையால் அதிமுகவில் குழப்பம் இருந்தது. அதிமுகவிற்கு பலனில்லை இந்த விவகாரத்தில் நான் தலையிட்டு கருத்து கூறியதற்கு ஒரே காரணம் தான். அதிமுக தொடர்ந்து பாஜகவுடன் பயணித்தால், இந்த வெற்றியெல்லாம் எந்த வகையில் பயன் தராது என்று சுட்டிக் காட்டுவதற்கு தான். அதிமுகவை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பாஜக வேரூன்றுவதற்கு முயற்சித்து வருகிறது. இதனால் அதிமுகவை நீர்த்துப் போக செய்யும் வாய்ப்புதானே தவிர, அதிமுகவுக்கு எந்த பலனையும் தராது. அதனை தான் டுவிட்டரில் கூறி இருந்தேன் என்று கூறினார்.
தொடர்ந்து ஆளுமை என்று எடப்பாடி பழனிசாமியை கூறியது ஏன் என்ற கேள்விக்கு, சாதாரண அடிமட்ட தொண்டனாக வந்து, இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக வந்துள்ளது சாதாரணமானதல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ்-ஐ பின்னுக்கு தள்ளி, ஆளுமையை நிரூபித்துக் காட்டியுள்ளார். கட்சியின் சட்ட விதிகளுக்கு முரணான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது வியப்பாக இருக்கிறது. இதனால் அரசியல் தலையீடு இருக்குமோ என்று தோன்றுகிறது என்று தெரிவித்தார்.
பின்னர் கூட்டணி கட்சிகளுக்கு முன்னதாக திருமாவளவன் வாழ்த்தியது எதனால் என்ற கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியதில் எனக்கு எந்த அரசியல் கணக்கும் கிடையாது. அதிமுக அதன் தன்மையில் பயணிக்க வேண்டுமானால், பாஜகவுடனான பயணத்தை துண்டித்துக் கொள்வதுதான் நல்லது. இப்போது கூட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவித்து எடப்பாடி பழனிசாமி துணிந்து களமிறங்கினார். அவர் பாஜகவுக்காக காத்திருக்கவில்லை. அந்த முடிவு பாராட்டுக்குரியது. இந்த வாய்ப்பு பாஜகவை சுமப்பதற்கு பயன்பட்டால், அனைத்தும் பாழ் தான் என்று தெரிவித்தார்.
அதேபோல், திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் கணக்கு இல்லை. அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று கணக்கும் கிடையாது. பாஜக அதிமுகவின் தோளில் ஏறிக் கொண்டு பயணித்து வருகிறது. வடமாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளை, நீர்த்துப் போக செய்கிறார்கள். அதிமுக பலமாக இருந்தால் தான், பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. பாஜக எதிர்ப்பு நிலையில் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். எங்களுக்கு திமுகவுடன் முரண்பாடோ, அதிருப்தியோ கிடையாது. பாஜக மற்றும் பாமக இருக்கும் கூட்டணியில் விசிக எப்போதும் இருக்காது. இதுவும் கொள்கை சார்ந்தது தான் என்று தெரிவித்தார்.