தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இலங்கையிடம் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த புதன்கிழமை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி, மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியடைந்து, துயரத்தில் இருக்கின்றனர். எனவே, படுகாயமடைந்தவர்களுக்கு உடனடியாக உயர்தர தீவிர சிகிச்சையை மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு உடனடியாக, இலங்கை அரசை தொடர்புக்கொண்டு தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். அதேபோல, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இலங்கையிடம் ஒன்றிய அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஒன்றிய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.