சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு அரசியல் செய்கின்ற ஒரே கட்சி திமுதான்: எடப்பாடி பழனிசாமி

சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு அரசியல் செய்கின்ற ஒரே கட்சி திமுதான். சந்தர்ப்ப சூழலுக்கு தகுந்தவாறு ஆட்சி செய்யும் ஸ்டாலின் அரசுக்கு இந்த தேர்ர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் திங்கள் கிழமை (பிப்.27) சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இதனால், இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக திமுக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. திமுகவின் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவிற்கு ஆதரவாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசுதான் செய்து கொடுத்தது. திமுக ஆட்சியில் ஈரோடு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகிறது திமுக. திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை. வாக்கு கேட்டு வரும் அமைச்சர்களை நிறுத்தி மக்கள் கேட்க வேண்டும். ஸ்டாலின் மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னார். இன்னைக்கு 22 மாதம் ஆகிவிட்டது. 22 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேளுங்கள். மாதம் தோறும் சிலிண்டருக்கு நூறு ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள். கொடுக்கவில்லை. 24, 200 ரூபாய் ஸ்டாலின் பெண்களுக்கு கடன் கொடுக்க வேண்டும். ஸ்டாலின் கடன் பெற்று இருக்கிறார். கொஞ்சமாக கொடுத்து மக்களை ஏமாற்றக்கூடாது. 24,200 ரூபாய் பாக்கி உள்ளது. வாக்கு கேட்டு வந்தால் 24,200 ரூபாயை கொடுத்து விட்டு வாக்கு கேளுங்கள் என்று சொல்லுங்கள்.

திமுகவினர் நேரத்திற்கு தகுந்தால் போல பேசுவார்கள். தற்போது இத்தனை அமைச்சர்கள் சுற்றி சுற்றி வருகிறார்களே. இதற்கு முன்பு வந்தார்களா? சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு அரசியல் செய்கின்ற ஒரே கட்சி திமுதான். சந்தர்ப்ப சூழலுக்கு தகுந்தவாறு ஆட்சி செய்யும் ஸ்டாலின் அரசுக்கு இந்த தேர்ர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.