ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் ஓட்டளிக்க சென்ற தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு திடீரென்று அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவருக்கும், தேர்தல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு சிறிது நேரம் கழித்து ஆனந்த் வாக்களித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேமுதிக வேட்பாளர் ஆனந்த் அக்ரஹாரம் மதரஸா பள்ளியில் ஓட்டு செலுத்த வந்தார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனந்த் தேமுதிக கட்சியின் துண்டு அணிந்திருந்தார். இது கட்சியை குறிப்பிடும் என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவருக்கும் தேர்தல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் விதிமுறை பற்றி தேர்தல் அலுவலர் விளக்கினார். இதையடுத்து ஆனந்த் அங்கிருந்து சென்று கட்சி துண்டை நீக்கவிட்டு வந்து அதே பூத்தில் ஓட்டு செலுத்தினார். அதன்பிறகு தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛தேர்தலில் எனது ஓட்டை பதிவு செய்துள்ளேன். இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களின் ஓட்டை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எந்த வேலை இருந்தாலும் கூட தேர்தலில் ஓட்டளிப்பது என்பது மிக முக்கியம். மக்கள் நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை மீட்டு எடுக்கும் வேட்பாளர் யார்? என்பதை யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கட்சியை குறிப்பிடும் வகையிலான துண்டு போடக்கூடாது என தேர்தல் அலுவலர் கூறினர். இது விதிமுறையாகும். இதுபற்றிய விபரத்தை என்னிடம் கூறவில்லை. இதனால் கட்சியை குறிக்கும் அடையாளங்களை தவிர்க்க வேண்டும் என்றார். அதனை நான் பின்பற்றி ஓட்டளித்தேன்” என்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கலைமகள் பள்ளியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர்க்க வீடுகளில் இருந்து வாக்களிக்க மக்கள் வர வேண்டும் என்றார்.