சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராடியவர்கள் கைது!

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கொலை வெறித் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய பல்வேறு தமிழ் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்க இலங்கை அரசு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இந்தியா- இலங்கை இடையே மீனவர்களுக்கான லைசென்ஸ் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது. ஆனால் இலங்கை கடற்படையினரோ கடந்த சில நாட்களாக திடீரென தமிழ்நாட்டு மீனவர்களை கொடூரமாக தாக்கி வருகின்றனர். கோடியக்கரை கடல் எல்லைக்குள் ஊடுருவியும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்துகின்றனர். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்கவே கூடாது என இலங்கை அமைச்சரும் சீனா ஆதரவாளருமான டக்ளஸ் தேவானந்தா கூறி வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் இன்று பல்வேறு தமிழ் அமைப்பினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே17 இயக்கத்தின் சார்பாக இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக திருமுருகன்காந்தி, குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன், சுந்தரமூர்த்தி, ப்ரவீன், காசிபுதியராசா உள்ளிட்ட தமிழர் அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக இது தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறுகையில், நம் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். பாஜக அதானி நலனுக்காக இலங்கையோடு கொஞ்சி குலாவுகிறது. இலங்கை ராணுவத்துடன் இந்திய ராணுவம் பயிற்சி செய்கிறது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கை மீதான நம்நாட்டின் மென்மையான போக்கினால் தமிழ்நாட்டு மீனவர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். எத்தனை காலம் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவதை அனுமதிக்கபோகிறோம். தமிழ்நாட்டில் துப்பாக்கியை ஏந்துங்கள் எனும் அண்ணாமலை இலங்கை தாக்குதல் குறித்து கள்ளமெளனம் காக்கிறார். தமிழ்நாடு முதல்வர்கள் கடந்த 40 வருடங்களாக கடிதம் எழுதவதை ஒரு கடமையாக மட்டும் செய்கிறார்கள் என கூறியிருந்தார்.