முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து பெற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் முடிவும் வெளியானது. இதில் தி.மு.க., காங்கிரஸ் உள்பட கட்சிகள் அடங்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். வெற்றி வாகை சூடிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று காலை வந்தார். அவருக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் சத்தியமூர்த்திபவன் அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பொன்னாடை போர்த்தி, இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், மாநில செயலாளர் அகரம் கோபி உள்பட பலர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் கே.எஸ்.அழகிரி புறப்பட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அங்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, முத்துசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் எம்.பி. உடன் இருந்தனர்.
சந்திப்பு முடிந்து வெளியில் வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வினர் நாங்கள் பணம் செலவழித்ததால் வெற்றி பெற்றதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க.வின் வேட்பாளர் தென்னரசு வாக்குப்பதிவு நடந்து முடிந்த அன்று அவர் மாலையில் நிருபர்களிடம், ‘தேர்தல் சுமுகமாக நடந்தது. தேர்தல் கமிஷன் மிக நியாயமாக நடந்து கொண்டது. எந்த தவறும் நடக்கவில்லை. ஈரோட்டை பொறுத்தவரையில், நாங்கள் நாகரிகமானவர்கள். எந்த தவறும் ஏற்படவில்லை’ என்று சொன்னார். 2 நாட்களுக்கு பின்னர், தோல்வி அடைந்ததும் எடப்பாடி பழனிசாமி சொல்லி கொடுத்ததை அவர் சொல்லியிருக்கிறார்.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருப்பவர் நன்றாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். மாற்றங்கள் வேண்டும் என்று சொல்வதற்கு எதுவும் கிடையாது. நாம் தமிழர் கட்சி என்றால், சி.பா.ஆதித்தனார் காலத்தில் இருந்த கட்சி தான் நினைவுக்கு வருகிறது. அது இன்றைக்கும் இருக்கிறதா? என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, 34 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டசபைக்கு செல்வதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ’34 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபைக்கு செல்கிறேன். அன்று ஏ.சி. இல்லை. இப்போது ஏ.சி. இருக்கிறது’ என்று பதில் அளித்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.