பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரே ஆயுதம் கல்வி: உதயநிதி ஸ்டாலின்

நாமக்கல்லில் நடந்த கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் `பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரே ஆயுதம் கல்வி தான்’ என்று பேசினார்.

நாமக்கல்- திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் நுழைவுவாயில் அருகே நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். கலெக்டர் ஸ்ரேயா சிங் வரவேற்று பேசினார். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமைச்சராகப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இரண்டாவது முறையாக நாமக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ளேன். இதற்கு நான் உங்கள் மீது வைத்துள்ள அன்பும், நீங்கள் என் மீது வைத்துள்ள அன்புமே காரணம். அந்த அன்பின் அடையாளமாகவே மேடைக்கு வரும்போது, அனைவரும் கை கொடுத்தார்கள். மேடைக்கு வரும்போது கை இருக்குமா இல்லை உங்களிடம் கொடுத்து வந்துவிடுவேனா என்று சந்தேகப்படும் அளவுக்கு உங்கள் அன்பு இருந்தது. உங்கள் அனைவருக்கும் என்னுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பது புரிகிறது. எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. இருப்பினும், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியுள்ளது. மீண்டும் நிச்சயம் நாமக்கல் மாவட்டத்திற்கு வருவேன்.

மிகப் பெரிய ஆளுமையின் சிலையைத் திறக்கும் வாய்ப்பை அளித்ததற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாமக்கல் கவிஞர் இங்குச் சிலையாக மட்டுமில்லாமல்.. தமிழாகவும் எழுந்து நிற்கிறார். அவருக்கு இங்குச் சிலையை அமர்த்ததன் மூலம் நாம் தாய் மொழிக்குப் பெருமை சேர்த்துள்ளோம். நாமக்கல் மாவட்டத்திற்கே அடையாளமாக இருப்பது நாமக்கல் கவிஞர்தான். அவர் நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே அடையாளமாகத் திகழ்கிறார். எளிமையான குடும்ப பின்னணியைக் கொண்டிருந்தாலும், வலிமையான தமிழ் புலமையால் கவிதை எழுதியவர். அழகியலுக்காக மட்டுமின்றி விடுதலைக்காகவும் தமிழைப் பயன்படுத்தியவர் நமது நாமக்கல் கவிஞர்.. அவரது பேச்சுக்கள் எளிய மக்களிடம் விடுதலை போராட்ட உணர்வை ஏற்படுத்தியது. அவர் அப்போது காங்கிரஸ் இயக்கத்தினருடன் இணைந்து விடுதலைக்காகப் போராடினார். உப்பு சத்தியாகிரகம் ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் காந்தி உப்பு சத்தியாகிரகத்தை அறிவித்தார். அப்போது தமிழ்நாட்டிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. வேதாரண்யத்தில் நேதாஜியுடன் கலந்து கொண்டவர் தான் நாமக்கல் கவிஞர்.. அப்போது தான் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகிறது என்ற விடுதலை போராட்ட பாடலை எழுதினார். இதற்காகக் காந்தியே அவரை பாராட்டினார். இப்படிப்பட்ட ஒருவரை நாம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இப்போது இருக்கும் நமது சமூகம் அனைத்தையும் அனைவரையும் மறந்துவிடுகிறார்கள். தன்னை முதல்வராக்கியவரையே ஒருவர் யார் என்று கேட்டார். நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். வரலாற்றையே வாட்ஸ்அப் மூலம் இப்போது திரித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையை விடப் பொய் வேகமாகப் பரவுகிறது. திருவள்ளுவருக்கே காவி சாயம் அடிக்க முயல்கிறார்கள். நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வரலாற்றைத் திரிக்க முயல்பவர்கள் இருப்பதால், நாம் உண்மையைத் திருப்பி திருப்பி சொல்ல வேண்டி உள்ளது. அதிலும், இங்குத் தமிழ்நாட்டில் ஒருவர் இருக்கிறார். அவர் தமிழ்நாட்டின் பெயரையே மாற்ற முயன்றார். இன்று மட்டும் திமுக ஆட்சியில்லாமல்.. அதிமுக ஆட்சி இருந்திருந்தால் தமிழ்நாட்டின் பெயரைக் கூட மாற்றியிருப்பார்கள்.

தலைமைச் செயலக கட்டிடத்திற்கு நாமக்கல் கவிஞர் மாளிகை பெயரை வைத்தவரும் கருணாநிதிதான். கருணாநிதி பெயர் வைத்த கல்லூரியில், அவரது பேரன் சிலை திறக்க வந்துள்ளேன். சுமார் 20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகே நாமக்கல் கவிஞருக்கு இப்போது சிலை திறக்கப்பட்டுள்ளது. சொத்தில் பெண்களுக்குச் சமபங்கு என்பதை 1989ஆம் ஆண்டிலேயே கருணாநிதி கொண்டு வந்துவிட்டார். ஆனால், அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்தே மற்ற மாநிலங்களில் இந்த சட்டத்தைக் கொண்டு வருகின்றனர். திமுக அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் பசியுடன் வரக் கூடாது என்பதற்காகக் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச கட்டணமில்லா பயணம். இதில் பல கோடி பேர் பயனடைந்துள்ளனர். அதேபோல புதுமைப் பெண் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி தான். பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு அண்ணனாக அனைத்தையும் செய்வேன். ஒவ்வொருவருக்கும் நாம் என்னவாக வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் இருக்கும். அதை நோக்கி பயணிக்க, உழைக்க தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.