ஈரோடு கிழக்கு முடிவுகள் மதவாத சக்திகளுக்குச் சம்மட்டி அடி: கமல்ஹாசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கின. சுயேச்சை வேட்பாளர்கள் சேர்ந்த மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இப்போது திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில், இந்த இடைத்தேர்தலை அவர்கள் கவுரவ பிரச்சினையாகவே பார்த்தது. இதன் காரணமாகவே வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்பே திமுக தலைவர்கள் பிரசாரத்தில் இறங்கினர். முதல்வர் ஸ்டாலின் தொடங்கிப் பல மூத்த தலைவர்களும் ஈரோடு கிழக்கில் தீவிர பிரசாரம் செய்தனர். அதேநேரம் அதிமுகவில் வேட்பாளர் அறிவிப்பில் இருந்தே குழப்பம் இருந்தது. ஒரு வழியாக எடப்பாடி அறிவித்த தென்னரசு களமிறங்கிய போதிலும், இரட்டை இலை வாக்குகளை அவர்கள் கவரத் தவறிவிட்டதாகவே தெரிகிறது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸில் இருந்து ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் இருந்து மேனகா களமிறங்கினர். இந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. அதன்படியே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாகக் கமல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்து பிரசாரமும் செய்தார். இப்படிப் பல தலைவர்கள் இளங்கோவனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனர். இதற்கிடையே கடந்த மார்ச் 2ஆம் தேதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். அவர் மட்டுமே டெபாசிட்டை பெற்ற நிலையில், நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

இதனிடையே ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றுள்ள வெற்றிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மதவாத சக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வீரர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும்,தோழமைக் கட்சிகளுக்கும், தேசம் காக்க என்னோடு கைகோர்த்த மநீம சொந்தங்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.