தமிழ்நாடு வந்த பீகார், ஜார்க்ண்ட் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்!

வட மாநிலத்தவர் மீது தாக்குதல் எனப் பொய்யான தகவலைச் சிலர் திட்டமிட்டுப் பரப்பி வந்தனர். இதற்கிடையே பீகார், ஜார்க்ண்ட் மாநிலங்களில் இருந்து வந்தக் குழுக்களுடன் தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

வட இந்தியாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளாகவே வேலை தேடி இளைஞர்கள் தமிழ்நாடு வரும் பழக்கம் அதிகமாகவே இருந்தது. வேலை நிச்சயம் கிடைக்கும், அங்குடன் ஒப்பிடுகையில் ஊதியம் அதிகம் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் இங்கு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் கட்டிட வேலை, ஹோட்டல் வேலை உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழக இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதை வட மாநில இளைஞர்களே பூர்த்தி செய்கிறார்கள். தமிழக இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதாலேயே வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதாக வணிகர்களும் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே இணையத்தில் திட்டமிட்டு சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் வட மாநில தொழிலாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகக் கூறி பொய்யான வீடியோக்களையும் தகவல்களையும் பரப்பி வருகின்றனர். சில வட இந்திய ஊடகங்களும் கூட இதுபோன்ற செய்திகளை வெளியிட்டன. இருப்பினும், வேறு எங்கோ நடந்த சம்பவங்கள் மற்றும் பழைய சம்பவங்களைத் திரித்து ஏதோ இப்போது தமிழ்நாட்டில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் என்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்கச் சிலர் முயன்று வருகின்றனர். இருப்பினும், இது பொய்யாகப் பரப்பப்படும் வீடியோக்கள் என்று தமிழ்நாடு போலீசார் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளனர். மேலும், இதுபோன்ற பொய்யான வீடியோக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிலர் மீது வழக்கும் கூட பதிவு செய்து அதிரடி காட்டியுள்ளது தமிழ்நாடு போலீஸ்.

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கும் போதிலும், திட்டமிட்டு இதுபோன்ற தகவல்கள் பரப்புவதால் சில மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டது. குறிப்பாகப் பீகார் மாநிலத்தில் சட்டசபையிலேயே அம்மாநில பாஜக எம்எல்ஏக்கள் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். தாக்குதலைத் திட்டவட்டமாக மறுத்த அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருந்தார். மேலும், பீகாரில் இருந்து அதிகாரிகளை கொண்ட குழுவும் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படும் என்று அவர் அறிவித்தார்.

இதற்கிடையே வட மாநிலத்தவர் மீது தாக்குதல் எனப் பொய்யான தகவல் பரப்பப்படும் நிலையில், அந்த மாநிலங்களில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் குழுக்களுடன் தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் ஆலோசனை நடத்தினார். பீகார், ஜார்க்ண்ட் மாநிலக் குழுக்களுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பீகார் மாநிலத்தில் இருந்து பாலமுருகன் ஐஏஎஸ் தலைமையிலான குழு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி தமிழ்வாணன் உள்ளிட்டோர் கொண்ட குழு தமிழ்நாடு வந்துள்ளது. இந்த குழுவினர் தான் ஆலோசனையில் ஈடுபட்டனர். முன்னதாக, சென்னை புறநர் பகுதிகளில் இருக்கும் ஜார்க்ண்ட் மாநில தொழிலாளர்களிடம் அவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஜார்க்ண்ட்டில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் விசாரித்தனர்

வட மாநிலத்தவர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை என்பதை அனைத்து நிறுவனமும் தொழிலாளர்களிடம் உறுதியளிக்க வேண்டும் என்றும் தொழிலாளர் நலத்துறை, காவல் துறை, வருவாய்த் துறை சேர்ந்த மாவட்டந்தோறும் குழு அமைக்கப்படும் என்றும் பீகார் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் தெரிவித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில கிராம வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன், “இரு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நல்லுறவைச் சிதைக்கச் சிலர் முயல்கின்றனர். பீகாரில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களிடம் பேசினோம். பிரச்சினை ஏதுவுமின்றி தமிழ்நாட்டில் இருப்பதாகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். சிலர் மட்டும் பொய்யான வீடியோக்களை பார்த்து அஞ்சுகின்றனர். இருப்பினும் போலி வீடியோவை யாரும் நம்பக் கூடாது. அதை நம்பும் எண்ணத்தைப் போக்க வேண்டும். நாளை(இன்று) திருப்பூர், கோவை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.. இந்த விவகாரம் பரவ தொடங்கியது முதலே தமிழக அரசு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிரோம்.

இது போலி வீடியோக்கள் தான். இதை யாரும் நம்பத் தேவையில்லை. இரு மாநிலத்திற்கு இடையே நல்லுறவு வளர்க்கும் முயற்சியாகவே நாங்கள் இப்போது இங்கே வந்துள்ளோம். மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறோம். பீகாரில் இருந்து இங்கு வந்து நீண்ட காலம் பணிபுரிந்து வந்தோரிடம் நேரடியாகவே பேசினோம். அவர்களும் இவை முற்றிலும் போலியான தகவல்கள் என்பதை விளக்கினர். எனவே, இதை நம்பத் தேவையில்லை” என்றனர்.

மேலும், தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் அதிகாரிகளும் வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து விளக்கமளித்து வருகின்றனர். இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் வட மாநில தொழிலாளர்களின் பயத்தைப் போக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்தார். ஏற்கனவே, போலி வீடியோக்களை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.