மாணவர்கள் சிகரெட் பிடிச்சு வாழ்க்கையை தொலைச்சுடாதீங்க: அன்புமணி

மாணவர்களுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம் என்றும் சிகரெட் புகையை இழுத்து வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

காலநிலை மாற்றம் குறித்து மாணவர்கள் படிக்கும் வயதிலேயே நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். மாறிவரும் காலநிலை மாற்றத்தால் மிக மோசமான சூழலை இந்த உலகம் எதிர் கொள்ள இருக்கிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக சிகரட்டை ஒருமுறை இழுத்து பார்க்கலாம் என மாணவர்கள் எண்ணக்கூடாது. ஒரு முறை சிகரெட் புகையை இழுத்து விட்டால் அதோடு வாழ்க்கையே முடிந்து விடும். படிக்கும் வயதில் மாணவர்கள் தவறான பழக்கங்களுக்கு செல்லாமல் ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும். ஒரு ஆண் படித்தால் அவன் மட்டுமே படித்த மாதிரி அதுவே ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே படித்த மாதிரி. பெண் கல்வி என்பது மிக மிக அவசியமான ஒன்று. மாணவர்கள் சமுதாயத்திற்கு தொண்டு செய்யும் வகையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மரங்களை நடும் திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படித்து கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி தாங்களும் உயர்ந்து சமூகத்தை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.