பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 43 வயதான சிகாமணி, அதிமுகவில் பரமக்குடி நகர்மன்ற 3வது வார்டு கவுன்சிலராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரின் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் கயல்விழி என்ற பெண், கடந்த டிசம்பர் மாதம் பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாத 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை சிகாமணிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். பள்ளி மாணவிக்கு உதவுவதாக கூறிய சிகாமணி, பார்த்திபனூர் அருகே மருச்சுக்கட்டு என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் கயல்வழி அறிமுகத்தின் பேரில் பிரபாகரன் என்பவரும் மாணவியிடம் அத்துமீறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து பரமக்குடி மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமதுவும் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த சிகாமணியின் நண்பரான மறத்தமிழர் சேனை அமைப்பின் மாநிலத் தலைவர் புதுமலர் பிரபாகன், மாதவன் நகரைச் சேர்ந்த ராஜாமுகம்மது ஆகியோரும் மாணவியை சீரழித்துள்ளனர்.

அதையடுத்து மாணவி கதறி அழுதபடியே பெற்றோரிடம் இது குறித்து கூற, பெற்றோர் போலீசிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் அதிமுக கவுன்சிலர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது, கயல்விழி, அன்னலட்சுமி என்கிற உமா என 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகிய இருவரும் இதுபோல் பலரிடமும் பேசி அவர்களை பாலியல் தொழிலில் தள்ளும் தரகர்களாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவி தொடர்ச்சியாக கும்பல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குழந்தை மீதான இக்கொடூரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவி ஒருவரை ஒரு மாத காலமாக பள்ளிக்குச் செல்லவிடாமல் ஏமாற்றி கடத்திச் சென்று கும்பல் பாலியல் வன்கொடுமைகள் செய்துள்ளனர். அச்சத்துடன் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்த விபரங்கள் சாதாரணமானதல்ல. பொள்ளாச்சியில் மாணவிகள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை போன்று பரமக்குடியிலும் நிகழ்ந்துள்ளது என்பது தெரிய வருகிறது. இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்டுள்ள பரமக்குடி நகர் அதிமுக அவைத்தலைவர் மற்றும் பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் சிகாமணி, மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, கயல்விழி, உமா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இக்கொடூர பாலியல் வன்முறையில் நகரத்தின் பல முக்கியப்புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதும், காவல்துறையில் உள்ள சிலரின் தொடர்பும் இருப்பதாகவும் தெரிய வருகிறது. எனவே, இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, முழுமையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விபரங்கள் வெளிவராமல் பாதுகாத்து, அவருக்கு உரிய நிவாரணம் வழங்கிடுவதோடு, அவர் படிப்பை தொடர்வதை உறுதி செய்திட வேண்டுமெனவும் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.