கோவையில் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராஜா விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி 2 ரவுண்ட் சுட்ட நிலையில் போலீசார் அவரை காலில் சுட்டு பிடித்தனர்.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சத்தியபாண்டி. இவர் கோவையில் தங்கி கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். இந்த சூழலில் கடந்த 2020ஆம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் சத்தியபாண்டி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சத்தியபாண்டிக்கு மற்றொரு ரவுடி கும்பல் கட்டம் கட்டியது. இருதரப்பிற்கும் இருந்த முன்விரோதம் காரணமாக கொலை செய்ய திட்டமிட்டது. இதையொட்டி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சத்தியபாண்டியை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாள் போன்ற ஆயுதங்களால் துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தினர். அதில் சத்தியபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகியோர் சென்னை அரக்கோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சத்தியபாண்டி கொலை விவகாரத்தில் சஞ்சய் ராஜா என்பவர் மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை கோவை மற்றும் கர்நாடக பகுதிகளில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சஞ்சய் ராஜா சரணடைந்தார். பின்னர் அவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மும்முரம் காட்டினர். இதற்கிடையில் சத்தியபாண்டி கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தான் எடுத்து தருவதாக சஞ்சய் ராஜா வாக்குமூலம் அளித்தார். உடனே துப்பாக்கியை எடுக்க கோவை கரட்டுமேடு பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகில் இன்று (மார்ச் 7) காலை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணலீலாவை சஞ்சய் ராஜா திடீரென சுட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆய்வாளர் கிருஷ்ணலீலா தப்பினார். அங்கிருந்த மரத்தின் பின்னால் மறைந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தற்காத்துக் கொள்ள சஞ்சய்ராஜாவின் இடது கால் முட்டியின் கீழ் துப்பாக்கியால் சுட்டார். அதில் படுகாயம் அடைந்த சஞ்சய் ராஜா கீழே விழுந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கீழே தவறவிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு தோட்டாவை அகற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சஞ்சய் ராஜா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாநகர போலீஸ் துணை ஆணையர் நந்தீஸ் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி போலீஸ் துணை ஆணையர் சந்தீஸ் கூறியதாவது:-
சரவணம்பட்டி பகுதி சஞ்சய் ராஜா கடந்த மாதம் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். முன்விரோதத்தில் கடந்த மாதம் துப்பாக்கியால் ஒருவரை கொலை செய்தது தொடர்பான வழக்கு ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் பதிவாகி இருந்தது. இந்த வழக்கில் சஞ்சய் ராஜா தான் ஏ1. சஞ்சய்ராஜாவிடம் மொத்தம் 2 துப்பாக்கிகள் இருப்பதாக அவரது கூட்டாளிகள் தெரிவித்தனர். இவரிடம் இருந்த ஒரு துப்பாக்கி சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. 2வது துப்பாக்கியை பறிமுதல் செய்ய முயன்றோம். அப்போது சரவணம்பட்டியில் தான் வசித்த நிலையில் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்ததாக கூறினார். இதையடுத்து இன்று காலை துப்பாக்கியை பறிமுதல் செய்ய அவரே போலீசாரை அழைத்து சென்றார். மேலும் துப்பாக்கி மறைத்து வைத்திருக்கும் இடத்தை காட்டுவதாக தெரிவித்தார்.
அப்போது கல்லுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த ரிவால்வரை எடுத்து அவர் திடீரென்று சுட்டார். ஏற்கனவே லோட் செய்யப்பட்டு இருந்ததால் அவர் இன்ஸ்பெக்டர், எஸ்ஐஸை நோக்கி வேகமாக 2 முறை சுட்டார். இதனை போலீசார் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கடவுள் அருளால் குண்டு யார் மீதும் படவில்லை. மரத்தின் நடுப்பகுதியை துளைத்தது போல் உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். எஸ்ஐ சந்திரசேகர் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சஞ்சய்ராஜாவின் காலில் குண்டு பாய்ந்தது. சுருண்டு விழுந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
மேலும் சஞ்சய் ராஜாவிடம் இருந்தது ரிவால்வர். இது நாட்டு துப்பாக்கி வகையை சேர்ந்தது போல் உள்ளது. இதுதொடர்பாக இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டுவதாக கூறி அவர் 2 ரவுண்டு சுட்டார். இது மரத்தை துளைத்துள்ளது. அங்கும் ஆய்வு மேற்கொள்கிறோம். மேலும் இந்த சம்பவத்தில் போலீசில் யார் மீதும் துப்பாக்கி குண்டு பாயவில்லை. பாய்ந்திருந்தால் உயிர் கூட போய் இருக்கலாம். ஏனென்றால் சஞ்சய் ராஜா மார்பை நோக்கி தான் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.