மகளிர் இலவச பயணம் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா: ராஜன் செல்லப்பா!

போக்குவரத்து துறை அமைச்சரால் பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்று ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி நிதியின் கீழ் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் பள்ளி கட்டடத்திற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பூமி பூஜை விழாவை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து., செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜன் செல்லப்பா கூறியதாவது:-

50 லட்சம் மதிப்புள்ள கட்டிடத்திற்கு பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக மதுரையில் முதல்வர் கள ஆய்வு செய்துள்ளார். கள ஆய்வு குறித்து முறையான முடிவுகள் வெளிவரவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை. முதல்வர் ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் அழைக்கவில்லை. இந்த கள ஆய்வு குறித்த முடிவு தெரியவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு சட்ட சபையில் முதல்வர் மற்றும் ஊராட்சி நகர்ப்புற அமைச்சர் உள்ளிட்டோர் அறிவித்தனர். இதுவரை அந்த திட்டதிற்கு அறிக்கை வெளியிடவில்லை. மதுரை மாவட்டத்தில் குடிநீர் கிடைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டதில் விடை கிடைத்ததா, அறிவிக்கப்பட்ட டைட்டல் பார்க் குறித்து ஆய்வு செய்தார்களா, அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் வழித்தடங்கள் பற்றி ஆய்வு செய்தாரா என எதுவுமே இல்லை.

கோடை காலம் வர இருக்கிறது. வைகை அணையில் 54 அடிக்கு கீழ் தண்ணீர் வந்து விட்டது. கோடைகாலத்தில் மக்களுக்கு குடிநீருக்காக இந்த அரசு என்ன செய்ய உள்ளது? எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினராக நான் கேட்டதற்கு மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி குறித்து துறை அமைச்சரை ஜப்பான் ஜைக்கா நிதி நிறுவனத்திடம் சென்று கேட்க உள்ளார்களா? இன்றைக்கு தமிழகத்தில் பள்ளி அருகிலே புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை தடுப்பதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

மதுரையில் கள ஆய்வு செய்த முதல்வர் கீழடி அருங்காட்சியகம் திறந்து வைத்தார். இந்த திட்டம் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தது அதிமுக. திருப்பரங்குன்றம் ரோப் கார் திட்ட பணி எப்பொழுது தொடங்கும்? சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரியல் எஸ்டேட் டாஸ்மாக் பல்வேறு கட்டிட வகைகள் மற்றும் சினிமா துறை என அனைத்திலும் திமுகவினர் ஆக்கிரமித்தது போல தனியார் பேருந்துகளை இயக்குவதன் மூலம் போக்குவரத்து துறையும் திமுகவினர் ஆக்கிரமித்துக் கொள்ள ஏற்பாடு செய்து வருகின்றனர். அதற்கான முயற்சி தான் இது.

ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து என்ற திட்டம் இருந்து வருகிறது. தனியாருக்கு பேருந்துகள் விடுவதன் மூலம் மகளிர் இலவசமாக பயணம் செய்ய முடியுமா? திமுக அரசு பெண்களுக்கு என கொண்டு வந்த திட்டம் இலவச பேருந்து திட்டம். அந்தத் திட்டத்தையும் முடக்குவதற்கு இந்த அரசு வழிவகை செய்கிறது. 20 பெண்கள் பயணிக்கும் பேருந்தில் 50 பெண்கள் பயணம் செய்தார்கள் என போலியாக கணக்கு காட்டி 1300 கோடி ஊழல் செய்திருக்கிறது. போக்குவரத்து துறை அமைச்சரால் பெண்கள் இலவச பேருந்து குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?

அதிமுகவில் பல பேரை இணைப்பது இயற்கை. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அண்ணா திமுக என்ற இரண்டு கட்சிகள்தான். அதிமுகவில் பல கட்சியில் இருந்தும் வந்து சேர்கின்றனர். அதே போலத்தான் பாஜகவில் இருந்து வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் செய்த விமர்சனம் என்பது தனிப்பட்ட விமர்சனம். எடப்பாடி தூண்டுதலில் இதை சொல்லவில்லை. அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை சொல்லியிருக்கிறார்கள். அதிமுக சொல்லவில்லை. நட்பு கட்சிகள் தேர்தல் கால நட்பு கட்சிகள்தான். பொதுவாக அரசியலில் சில செய்திகளை வெளியில் சொல்ல முடியாது. சரியான அணுகுமுறை இல்லாததால் அந்த மாதிரி சூழலிலும் கூட கடைசி நேரம் வரை பாஜக ஒரு முடிவை எடுக்காமல் இழுத்தடித்ததில் எடப்பாடிதான் அதிமுக தலைமை என்று பாஜக உணர்வதற்கு கால தாமதம் ஆகிவிட்டது என்ற மன வருத்தம் எங்களுக்கு எல்லாம் இருந்தாலும் கூட அதை நட்பு கட்சி என்பதை மறுக்கவில்லை. ஆனாலும் கூட ஒவ்வொரு கால கட்டத்தில் தேர்தல் நேரம் வருகிற போது எப்போதும் அந்தக் கூட்டணி இருக்கும் என்பதிலே எங்களிடம் கருத்தொற்றுமை இல்லை. ஏனெனில் சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தால் பாஜகவிற்கு அளித்த ஆதரவை ஜெயலலிதா திரும்ப பெற்ற வரலாறும் அதிமுகவிற்கு உண்டு.

தமிழகத்தை பொருத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணியே தவிர எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, எங்களின் தோளில் ஏறி உட்காருவதற்கு கூட சில நேரங்களில் அனுமதித்து இருக்கிறோம். ஆனால், காதை கடிக்க போனால் தான் இறக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே எங்களோடு துணை இருக்கலாமே தவிர எங்களுக்கு தலைமை வகிக்கிற வாய்ப்பு எந்த தேசியக் கட்சிக்கும் இருக்காது. அதிமுக தொடர்ந்து போராடும்.. வெற்றி பெறும். மீண்டும் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமரும். பாஜக என்ன விமர்சனம் செய்தாலும் சரி எங்களுடைய தலைமை அதற்கான பதிலை கால நேரம் பார்த்து சொல்வார்கள். இப்போது அவசியம் ஏற்படவில்லை. அண்ணாமலை எங்களை விமர்சித்தால் கூட அதற்கு எங்கள் தலைமை உரிய நேரத்தில் உரிய வகையில் பதில் சொல்லும் அல்லது நட்பு பாராட்டும். இவ்வாறு ராஜன் செல்லப்பா கூறினார்.