நான் தலைவனாகத்தான் முடிவுகளை எடுப்பேன். ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், மாநில செயலாளர் திலிப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி ஆகிய முக்கிய நிர்வாகிகள் ஒரே வாரத்தில் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விலகி சென்றவர்கள் மூவரும் அண்ணாமலை மீது கடுமையான குற்றசாட்டுகளை வைத்துவிட்டு சென்றிருப்பது டெல்லி மேலிடம் வரை சென்றுள்ளது. இது அண்ணாமலையின் நிம்மதியை கெடுத்துள்ளது. கட்சியில் இருந்து சென்றவர்கள் திமுகவில் இணைந்திருந்தாலும் அரசியல் சூழ்ச்சி என்று சொல்லிவிடலாம் ஆனால் கூட்டணி கட்சியிலேயே இணைந்துவிட்டதால் மேலிடத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி வருகிறாராம் அண்ணாமலை.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறியதாவது:-
தமிழகத்தில் ஒரு தோசையை சுட்டுகிட்டு, இட்லியை சுட்டுக்கிட்டு, பாஜகவின் மேனேஜராக உட்கார்ந்து சீட்டை தேய்ச்சிகிட்டு அப்படியே சைட்ல போய்கிட்டு இருக்க வரலை, அண்ணாமலை இங்கு தலைவராக வந்திருக்கேன். தலைவராக இருப்பவன் தலைவராகத்தான் முடிவுகளை எடுப்பான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவுகள் எப்படி இருக்குமோ அப்படித்தான் எனது முடிவுகளும் அதிரடியாக இருக்கும். இதில் பயம், ஒருவருக்கு சார்ந்து பேசுதல், பின்னாடி போய் கைகட்டி பேசுவது இதெல்லாம் கிடையாது. நான் ஒரு தலைவன், தலைவன் தலைவனுக்கு தகுந்த மாதிரிதான் முடிவுகளை எடுப்பான். இதில் பாரபட்சம் கிடையாது.
அதிமுகவிலிருந்து நிறைய முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைந்த போது ஜெயலலிதா மீதும் இதே குற்றச்சாட்டை வைத்திருக்கலாமே. ஏன் இது போன்ற அதிரடி முடிவுகளை கருணாநிதி எடுத்ததில்லையா, அவர்கள் எல்லாம் தலைவர்கள். அவர்கள் முடிவெடுத்தால் 4 பேர் கோபப்பட்டுக் கொண்டு வெளியே வரத்தான் செய்வார்கள். நானும் அது போன்ற ஒரு தலைவர்தான். கட்சி வளர்ச்சிக்கு என்ன முடிவு எடுக்கணுமோ அந்த முடிவுகளை துணிந்து எடுப்பேன். நான் போற ஸ்பீடே குறைவாக இருக்கு என்கிறார்கள். 2026 இல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் இன்னும் 3ஆவது கியரில் போகிறீர்களே, டாப் கியருக்கு மாறுங்கள் என்கிறார்கள். இன்னும் வரும் காலத்தில் வேகத்தை அதிகரிப்பேன். இதனால் 4 பேர் கட்சியை விட்டு வெளியே போய் அண்ணாமலையை விமர்சிப்பார்களா என பயந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட மாட்டேன். நான் தலைவனாகத்தான் முடிவுகளை எடுப்பேன். ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எல்லாரும் திட்டிவிட்டு எங்கே போகிறார்கள். விவசாயம் செய்யவா, சமூகசேவை செய்யவா, இல்லையே. இங்க திட்டிட்டு வேறு அரசியல் கட்சியில் இணைந்து கொண்டு இன்னொரு அரசியல் கட்சிக்கு வாழ்க என சொல்ல போகிறீர்கள். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
அதேபோல, ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, பாஜகவினர் அதிமுகவில் இணைவதை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஆவேசமாக பதிலளித்த அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளை வேட்டையாடுவதாக கூட்டணி கட்சியான அதிமுகவை கடுமையாக சாடினார். “ஒரு முன்னாள் முதல்வர், பாஜகவில் இருந்து இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை மற்றும் ஐந்தாம் நிலை செயல்பாட்டாளர்களைகூட கட்சிக்குள் வரவேற்க விரும்புகிறார் என்றால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் பாஜக வந்துள்ளதை இது காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமியை போல அதிமுக புள்ளிகளை நான் வேட்டையாட முடிவு செய்தால் என்னுடைய லிஸ்ட் பெரியதாக இருக்கும். அதற்கான, நேரத்தையும் இடத்தையும் நான் முடிவு செய்வேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.