தமிழ்நாட்டில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இங்கே உள்ளே வடமாநில தொழிலாளர்கள் கூட இதைத்தான் சொல்கிறார்கள். வட இந்தியர்களால் நமக்குத்தான் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி தெரிவித்துள்ளார்.
வட இந்தியர் பாதுகாப்பு விவகாரம் தமிழ்நாட்டில் உச்சம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் கடந்த சில நாட்களாக பொய்யாக பல வீடியோக்கள் வேகமாக பரவின. இணையத்தில் இது தொடர்பாக பரவும் வீடியோக்கள் அனைத்தும் பொய்யானது ஆகும். பீகாரில் இந்த பொய்யான வீடியோக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு, நாமக்கல், கோவையில் வேலை பார்க்கும் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. இது தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில் கூறியதாவது:-
பீகார் தொழிலாளர் பிரச்னையை தொடங்கி வைத்தது பாஜக. பீகார் தேர்தலுக்காக இவர்கள் தொடங்கி வைத்த பிரச்சனை இது. தமிழ்நாட்டில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இங்கே உள்ளே வடமாநில தொழிலாளர்கள் கூட இதைத்தான் சொல்கிறார்கள். வடஇந்தியர்களால் நமக்கு வேண்டுமானால் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது. அதனால் அவர்களை நாம் எதிர்க்கிறோம். மற்றபடி வடமாநில மக்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை இல்லை. நம்முடைய வேலைகளை வடமாநில மக்கள் பறிக்கிறார்கள்;. இங்கே பலருக்கு வேலை இல்லை. ஆனால் வடமாநில மக்களை வேலைக்கு வைக்கிறார்கள். வடமாநில மக்களை இங்கே கொண்டு வர காரணம் உள்ளது. அவர்கள் அதிக நேரம் வேலை பார்ப்பார்கள். குறைந்த வருமானத்திற்கு கூட வேலை பார்ப்பார்கள். உழைப்பு சுரண்டலுக்கு அவர்களை பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் அவர்களை திரும்ப அனுப்புங்கள். எங்கள் மக்களுக்கு வேலை கொடுங்கள் என்று கூறுகிறோம். மற்றபடி வடஇந்தியர்களை நாங்கள் வெறுக்கவில்லை. இங்கே உள்ளவர்களுக்கே வேலை இல்லை. இவர்கள் ஏன் வடமாநில மக்களை எடுக்கிறார்கள். இங்கே இவர்கள் வந்து வாக்காளர் அடையாள அட்டை பெறுகிறார்கள். இதனால் தேர்தல் முடிவு மாறுகிறது. இது கிட்டத்தட்ட படையெடுப்பு போல ஆகிவிட்டது.
கோவை தெற்கில் பாஜக ஜெயிக்க காரணம் வடமாநில மக்களின் வாக்குகள்தான். துறைமுகத்தில் பாஜக முன்னிலை பெற காரணம் அவர்கள்தான். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை எதிர்க்கும் அரசு, வடஇந்தியர் வருகையை எதிர்க்கவில்லை. எனக்கு புரியவில்லை. புலம்பெயர் தொழிலாளர் கொரோனா காலத்தில் கஷ்டப்பட்டதை பார்த்து நாங்கள் வருத்தப்பட்டோம். ஆனால் அதற்காக வடஇந்தியர்கள் நம்முடைய வேலையை எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது. இங்கே இருக்கும் தொழிலாளர்களிடம் உழைப்பை சுரண்ட வேண்டும், அவர்களுக்கு குறைவாக சம்பளம் கொடுத்து அவர்களை ஒதுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இங்கே அதிகப்படியாக வடஇந்தியர்கள் குடியேறினால் ஆபத்தாக முடியும். தமிழ்நாடே சவுக்கார் பேட்டையாக மாறும். மார்டவாடிகளுக்காக இவர்கள் இறைச்சி கடைகளை மூடியது நினைவு இருக்கா? அவர்களுக்கு இங்கே ஆதிக்கம் என்ன?
வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது என்று சொன்னது அண்ணாதான்.. அந்த முழக்கத்தை இவர்கள் கைவிட்டுவிட்டார்களா? திமுக பாதை மாறிவிட்டதா? நம் மாநிலத்தில் பிற மாநில மக்கள் வாழலாம். ஆனால் இங்கே அரசியல் ரீதியாக அவர்கள் ஆதிக்கம் செலுத்த கூடாது. நம் மக்களை துன்புறுத்த கூடாது. வடமாநில மக்கள் நம்மைதான் அச்சுறுத்துகிறார்கள். ராமேஸ்வரத்தில் பாலியல் சம்பவம், ஏடிஎம் கொள்ளை, முதலாளியை கொன்ற வடமாநில ஊழியர் என்று தமிழ்நாட்டிற்கு அவர்களால்தான் ஆபத்து இருக்கிறது. நம்மால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவர்கள் இங்கே இருக்கலாம். ஆனால் அவர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது. அரசியல் ரீதியாக அவர்கள் அழுத்தம் தெரிவிக்க கூடாது. அதை அனுமதிக்க முடியாது. கோவை தெற்கு, துறைமுகம் தொகுதியில் நடந்தது தமிழ்நாடு முழுக்க நடக்க கூடாது என்பதே எங்கள் நோக்கம். இவ்வாறு இடும்பாவனம் கார்த்தி தெரிவித்துள்ளார்.