நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அவதூறாக பேசியதாக கூறி கல்யாணராமன் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.
சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கல்யாணராமன். சமூக வலைதளங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் சிறுபான்மையினருக்கு எதிராக மத வெறுப்பை பரப்பும் கருத்துக்களை தெரிவித்து வருவது இவரது வழக்கம். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். இதற்காக அவரை கைது செய்யக்கோரி இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதனைத் தொடர்ந்து கல்யாணராமனை கைது செய்த காவல்துறை அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. அத்துடன் அவரது டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு எதிரான முதல் குண்டாஸ் ரத்து செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளிவந்தார் கல்யாணராமன்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் டுவிட்டர் கணக்கு தொடங்கி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் டுவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டதாகக் கூறி கடந்த 2021 அக்டோபர் 16ம் தேதி கல்யாணராமனை போலீசார் கைது செய்தனர். அப்போது கைது செய்ய வந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் கல்யாணராமனும் பாஜகவினரும் ஈடுபட்டனர். கோபிநாத் என்பவர் சைபர் கிரைமில் அளித்த புகாரின்பேரில், கல்யாணராமன் மீது 2 பிரிவுகளின் தமிழ்நாடு காவல்துறை கீழ் வழக்கு பதிவு செய்தது. அவரை அக்டோபர் 23 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். புழல் சிறையில் முதலில் அடைக்கப்பட்டிருந்த கல்யாணராமன், பின்னர் நிர்வாக காரணங்களுக்காக, கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்ததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தொடர்ந்து மத வெறுப்பு கருத்துக்களை தெரிவித்து வரும் கல்யாணராமன் குறித்து சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றம் விசாரணை செய்து வந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் கல்யாணராமனுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனை அடுத்து கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிப்பதாக எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரம் குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தபோதே அவர் 163 நாட்கள் சிறையில் இருந்துவிட்டதால் கைது செய்ய தேவையில்லை என நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.