சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பினால் ஒப்புதல் தந்தாக வேண்டும் என்பதுதான் சட்டம் என்றும் சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தினால் தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பல லட்சத்தை இழந்த இரண்டு இளைஞர்கள் தங்களின் மனைவி குழந்தைகளை விட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சட்டம் கொண்டு வருவதற்கு சரியான தரவுகள் கூறப்படவில்லை என்று கூறி அந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இதுபோன்ற சட்டங்கள் வலுவான சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி, இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு கடந்த 27.6.2022 அன்று தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை அதே நாளில் நடந்த அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித்துறை மூலமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்து பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனை கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 29.8.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அதன்படி அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு பின்னர் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை பெறுவதற்காக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது அனுப்பிவைக்கப்பட்ட அன்றைய தினமே கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான அவசரச் சட்டம் வெளியிடப்பட்டது. அந்த அவசரச் சட்டத்தை நிரந்தர சட்டமாக நிறைவேற்றும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தமிழக சட்டசபையில், ஆன்லைன் ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதா, அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த மசோதா கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அவசரச் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்த ஆளுநர், அதற்கான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது.
ஆன்லைன் சூதாட்டத்தினால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநருக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், அந்த மசோதா தொடர்பாக தமிழக அரசிடம் சில கேள்விகளை ஆளுநர் எழுப்பினார். அதற்கு விளக்கம் அளிக்கும்படி அரசை ஆளுநர் கேட்டுக்கொண்டார். ஆளுநரிடம் இருந்து அந்த கடிதம் வந்த 24 மணி நேரத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தமிழக அரசு விளக்கம் அளித்தது. மேலும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதற்கான விளக்கத்தை ராஜ்பவனுக்கு நேரில் சென்று அளித்தார். அந்த சட்டத்தின் மீதான சில சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றபின்பு ஒப்புதல் தருவதாக ஆளுநர் தெரிவித்ததாக அமைச்சர் ரகுபதி கூறினார். ஆனாலும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அவசரச் சட்டம் கடந்த நவம்பர் 27ஆம் தேதியுடன் காலாவதி ஆனது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு ஒரே ஆதாரமாக அந்த சட்ட மசோதா மட்டுமே இருந்தது. ஆனாலும் அந்த மசோதாவுக்கு உடனடியாக ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தினால் மட்டும் இதுவரை 44 பேர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பி வைத்தார். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 139 நாட்கள் கழித்து அந்த மசோதா திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து ஆா்.என்.ரவி அளித்துள்ள விளக்கத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் சட்டம் கொண்டுவர தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்றும், சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு முகாந்திரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்த சூழ்நிலையின் அடுத்த கட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி, சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதற்கு சில கேள்விகளை ஆளுநர் கேட்டிருந்தார். அதற்கு விளக்கம் அளித்து விட்டோம். அதற்குப் பிறகு இப்போதுதான் முதன் முறையாக திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். திருப்பி அனுப்பிய மசோதாவை நாங்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்துதான் ஆக வேண்டும் அதுதான் சட்டம். புதிய சட்டம் இயற்றுவதற்கு உரிமை உள்ளது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.