அரசியலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கோரி தெலங்கானா முதல்வரின் (KCR) மகள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் 10க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் கலந்து கொண்டன.
நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இன்னும் கனவாகத்தான் உள்ளது. இந்த கனவு நனவாக நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லியில் 10-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவருமான கவிதா அறிவித்திருந்தார். மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் இன்று (11-ந் தேதி) அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் விசாரணைக்காக ஆஜராக உள்ள நிலையில் கவிதா, டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தொடங்கிவைத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி துவக்கி வைக்க ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி, காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இந்த ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் கவிதா கூறியதாவது:-
சுமார் 500-600 உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தற்போது ஈடுபடுகின்றனர். ஆனால் வருகை மிக அதிகமாக இருக்கும். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 18 அரசியல் கட்சிகள் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளன. 2010 ஆம் ஆண்டு முதல் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குளிர்பதனக் கிடங்கில் கிடக்கிறது. 2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மோடி அரசுக்கு வரலாற்று வாய்ப்பு இருக்கிறது. 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மசோதாவை தனது அரசு கொண்டு வரும் என்று வாக்குறுதி அளித்தார். இது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு பகுதி. ஆனால் பாஜக தலைவர்கள் யாரும் இந்த பிரச்சினையை எழுப்பவில்லை. பெரும்பான்மை பலம் இருந்தும் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது. மேலும் இது மிகவும் வருத்தமளிக்கும் பிரச்சினை.
ஆண்களுக்கு நிகராக பெண்களை கொண்டு தான் உலகம் முன்னேறி வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது இந்தியாவில் நடக்கவில்லை. பிரதமர், அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் குறிப்பாக ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரை நான் வலியுறுத்த விரும்புகிறேன். மேலும், பெண்கள் பிரதிநிதித்துவத்தில் 193 நாடுகளில் இந்தியா 148வது இடத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் 543 பெண் உறுப்பினர்களில் 78 பேர் மட்டுமே உள்ளனர், அதாவது 14.4 சதவீதம். துரதிர்ஷ்டவசமாக, இது உலக சராசரியை விட மிகக் குறைவு. அண்டை நாடான பாகிஸ்தானில் பெண்களுக்கு 17 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்தியாவை விட வங்கதேசத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.