தூத்துக்குடியில் ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி 22ம் தேதி தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் அருகே இருக்கும் சோரீஸ்புரத்தில் இந்த சம்பவம் நடந்தது. வழக்கறிஞர் முத்துக்குமாரை அவரின் நகை அடகுகடை முன்பு வைத்து மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். முன்பகை காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலை வழக்கு ஒன்றில் ஏற்பட்ட முன்பகை காரணமாக இந்த கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கொலை வழக்கில் முக்கிய நபரான ரமேஷ் என்பவர் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து சுற்றி வந்தார். கடைசியில் அவரும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மொத்தமாக இந்த வழக்கில் இதுவரை 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர். மேலும் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில்தான் முக்கிய குற்றவாளியான ஜெய்பிரகாஷை போலீசார் தேடி வந்தனர். வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் தேடப்பட்டு வந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர்தான் இந்த கொலைக்கு பின் இருந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை போலீசார் கைது செய்ய முயலும் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். காவல்துறையினரை தாக்கிவிட்டு ஜெயப்பிரகாஷ் தப்ப ஓட முயற்சி செய்த போது அவர் காலின் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கடந்த ஒரு வாரத்தில் 3 முறையாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகளை பிடித்துள்ளனர்.