தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சி மீது கை வைத்தால் ஒரு பிஜேபிகாரன் கூட உயிரோடு இருக்கமாட்டான் என பொதுமக்கள் சொல்வதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே கோவில்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-
தமிழ்நாட்டு அரசியலை பாஜக வேறுவிதமாக கையாள நினைக்கிறது. மிரட்டிப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆட்சியை ஏதேனும் செய்து பார்க்கலாம் என நினைக்கின்றனர். ஆனால் ஒன்றை மட்டும் சொல்வேன்.. இந்த ஆட்சியின் மீது கை வைத்தால், திராவிட முன்னேற்றக் கழக அரசு எமர்ஜென்சி நேரத்தில் கலைக்கப்பட்ட போது நிலைமை வேறு. இன்றைக்கு இந்த ஆட்சியின் மீது கை வைத்தால் தமிழ்நாட்டில் ஒரு பிஜேபிகாரன் கூட உயிரோடு இருக்கமாட்டான் என்பதை மக்கள் சொல்கிறார்கள். நான் சொல்லவில்லை. இதை நான் சொல்லவில்லை. பொதுமக்கள் சொல்கின்றனர். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார்.
ஆர்.எஸ். பாரதியின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், பா ஜ கவினர் உயிருடன் இருக்க முடியாது என்று தி.மு.கவின் அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி தூத்துக்குடியில் பேசியிருக்கிறார். சட்ட மன்றத்தில் கொலை நடந்தாலும் வழக்கு தொடுக்க முடியாது என்று ஆளுநரை கொலை செய்வோம் என்று மிரட்டியதற்கு குறித்து மௌனம் காத்த முதல்வர் ஸ்டாலின், தற்போது பாஜகவினரை கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ள ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய உத்தரவிட வேண்டும். ஆளும் கட்சி என்ற ஆணவத்தில், திமிரில் இது போன்று வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியில் ஆர் எஸ் பாரதி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதோடு, இதே போன்று கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதை முதலமைச்சர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது, அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியாத காரணத்தினால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் கெடுக்க ஆளும் தி.மு.கவே முயற்சி செய்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது என கூறியிருந்தார்.
இதேபோல் ஆர்.எஸ்.பாரதியின் வீடியோ பேச்சை ஆங்கில மொழிபெயர்ப்புடன் டுவிட்டரில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில், தமிழக மக்கள் மற்றும் மற்ற அரசியல் கட்சித் தொண்டர்கள் தொடர்ச்சியாக அனுபவிக்கும் இன்னல்களை, பாஜகவினருக்கு கொலைமிரட்டல் விடுத்ததன் மூலம் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் திமுகவின் திரு ஆர்.எஸ்.பாரதி. முதல்வர் அவர்களே ஊழல், கமிஷன், லஞ்சம் இல்லாத ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க விரும்பும் நாங்கள், இந்த வெற்று மிரட்டல்களுக்கு பயப்படப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.