குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்

“குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்” என்று திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு நேர்முக உதவியாளர் சி.மணிவண்ணனின் மகள் லக்ஷயா-கவுதம் ஆகியோரின் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார். திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நான் தொடர்ந்து இதுபோன்ற சீர்திருத்த, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணத்தில் பங்கேற்கிறேன் என்று சொன்னால், அந்த திருமணத்தில் வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய ஒரு செய்தியை நான் சொல்லாமல் இருந்ததில்லை. அதை இந்த திருமண விழாவிலும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். அது என்ன என்று கேட்டால், இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறுமென்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெறாத சூழ்நிலையில்தான் நடைபெற்றிருக்கிறது. ஆனால் 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. அண்ணா தலைமையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா, முதன் முதலாக முதல்-அமைச்சராக சட்டமன்றத்திற்குள் நுழைந்து, சட்டமன்றத்தில் 3 தீர்மானங்களைக் கொண்டுவந்து உடனடியாக நிறைவேற்றித் தந்தார். அந்த மூன்றில் ஒன்றுதான் சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் ஏற்கனவே நடந்திருந்தாலும் இனி நடக்கவிருக்கக்கூடிய திருமணங்களாக இருந்தாலும், அந்த சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தார்.

அடுத்த தீர்மானமாக இருமொழி கொள்கையை சட்டமாக்கி தந்தார். அதற்கடுத்து இன்றைக்கு தமிழ்நாடு, தமிழ்நாடு என்று நாம் கம்பீரமாக சொல்லிக்கொண்டிருக்கிறோமே இந்த தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். எதற்காக இதையெல்லாம் சொல்லுகிறேன் என்று சொன்னால், இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்த திருமணம் என்பது வெறும் சீர்திருத்த திருமணமாக மட்டும் நீங்கள் கருதக்கூடாது, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணமாகவும் நடந்திருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், இது ஒரு தமிழ்த் திருமணம். இந்த தமிழைத்தான் தலைவர் கருணாநிதி, தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் செம்மொழி என்கிற அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தார். அப்படிப்பட்ட அழகு தமிழ் மொழியில் இந்த திருமணம் நடந்தேறி இருக்கிறது. இன்றைக்கு இப்படி பரவலாக எங்கு பார்த்தாலும், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுயமரியாதை, சீர்திருத்த திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இது தமிழ் திருமணமாக நடக்கிற காரணத்தால், நம்முடைய மணமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.