அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிப்பதாகவும் அவர்களுக்கும் ஆஸ்கர் விருதுகள் கொடுக்கலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசியுள்ளார்.
சர்வதேச அளவில் பெரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில் நேற்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அசல் பாடல் பிரிவுக்கான விருது ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு.. நாட்டு..’ பாடலுக்கு கிடைத்தது. அதேபோல் முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படத்துக்கும் விருது கிடைத்தது. ஆஸ்கர் விருது இந்தியாவுக்கு கிடைத்து பெருமை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் மட்டும் இன்றி அரசியல் துறையினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருவதைக் காண முடிகிறது. அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் ஆஸ்கர் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர் படத்தின் படல் மற்றும் தமிழ் குறும்படம் குறித்து பாராட்டி பேசியதோடு வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
அதேவேளையில், அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிப்பதாகவும் அவர்களுக்கும் ஆஸ்கர் விருதுகள் கொடுக்கலாம் என்றும் விமர்சித்தார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில், ஆஸ்கர் விருதை பொறுத்தவரையில் பெரிய கலை, எல்லா விஷயங்களிலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு கொடுப்பது வழக்கம். சிவாஜி எடுத்த தெய்வமகன் ஆஸ்கர் விருதுக்கு உகந்த படம். ஆனால், உண்மையில் அது மிஸ் ஆகிடுச்சு.. தமிழ்நாட்டை பொறுத்தவரை யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள குறும்படத்திற்கு ஆஸ்கர் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இது. மைக்கேல் ஜாக்சனை விட பிரமாதமாக ஆட முடியும் என்பதை ஆர்.ஆர் ஆர் படத்தில் உள்ள நாட்டு நாட்டு பாடல் நிரூபித்துள்ளது. இன்னும் திறமைசாலிகள் தமிழ்நாட்டில் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்கள் வரும் காலத்தில் வாங்குவாங்க..
உண்மையில் தமிழ்நாட்டில் அரசியலில் கூட நடிக்கிறாங்க.. அவுங்களை கூட ஆஸ்கருக்கு செலக்ட் பண்ணலாம். 2, 3 பேர் இருக்காங்க.. அவர்கள் யார் என்பதை பிறகு சொல்கிறேன்.. அந்த மாதிரி நடிகர் திலகம் நிறைய பேர் இருக்கிறார்கள். நாட்டு நாட்டு பாடலின் நடனம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவ்வளவு வேகமாக ஸ்டெப்ஸ், பெர்பார்மன்ஸ் சிறப்பாக இருந்தது. ஆர்.ஆர். ஆர் படத்திற்கும், யானை பற்றிய குறும்படத்திற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.