சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவு மேலும் நீட்டிப்பு!

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவை மேலும் நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.

நீதித்துறையை சர்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக, தானாக முன் பதிவு செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் வக்கீல் ஜாக்ரதி சிங் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. மனுவை கடந்த நவம்பர் 11-ந்தேதி பரிசீலித்த நீதிபதிகள், மனுதாரர் எவ்வளவு நாள் சிறையில் உள்ளார் என கேட்டனர். சவுக்கு சங்கர் சார்பில் வக்கீல் ரோமில் பாதக் ஆஜராகி, செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி, சுமார் 2 மாதங்களாக சிறையில் உள்ளதாகவும், தெரிவித்த கருத்துகள் பொதுவானது என்றும் தெரிவித்தார். வாதங்களுக்குப் பின் மனுதாரர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கப்படுகிறது, வழக்கு தொடர்பாக வீடியோ வெளியிடக்கூடாது என்றும், ஐகோர்ட்டு கிளை பதிவாளர், மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் உள்ளிட்டவர்கள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் சார்பில் ஆஜராக வேண்டிய மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், வேறொரு கோர்ட்டில் இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டது. இதற்கு மறுத்துவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே இடைக்கால உத்தரவில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகளை மனுதாரர் பின்பற்றுகிறாரா என கேட்டனர். பின்பற்றுகிறார் என சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான வக்கீல் ரோமில் பாதக் தெரிவித்ததுடன், தினமும் கோர்ட்டு சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவு மேலும் நீட்டித்து, விசாரணையை தள்ளி வைத்தனர். ஜாமீன் நிபந்தனை தளர்வு தொடர்பாக மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.