அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை‘செபி’ விசாரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தகவல்!

அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை சாா்ந்த குற்றசாட்டுகளை ‘செபி’ (இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியம்) விசாரித்து வருகிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி தெரிவித்தாா்.

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் மோசடி குற்றச்சாட்டு சுமத்தியது. அதனால், அந்தக் குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டன. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் இரு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிமன்றம் அதானி விவகாரத்தை ஆய்வு செய்து, முதலீட்டாளா்களிடையே விழிப்புணா்வை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்யவும், பங்குச் சந்தையில் அண்மையில் ஏற்பட்ட ஏற்ற-இறக்கத்துக்கான காரணிகளைக் கண்டறியவும் நிபுணா் குழுவை அமைத்தது. அதானி குழுமம் பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியமும் (செபி) 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், இது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் அமைச்சா் பங்கஜ் சௌதரி எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

ஹிண்டன்பா்க் அறிக்கைக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழுமத்தின் 9 நிறுவனங்கள் கடந்த ஜனவரி 24 முதல் மாா்ச் 24 வரை சுமாா் 60 சதவீதம் வரை இழப்பைச் சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸை கணக்கிடுவதில் அதானி குழுமம் சோ்க்கப்படவில்லை. அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி கணக்கீட்டில் அதானி குழுமத்தின் பங்களிப்பு 1 சதவீதத்துக்கும் குறைவுதான். எனவே, பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் அதானி குழுமம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் தொடா்பாக விசாரிக்க அரசு சாா்பில் எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை. பொதுத் துறை வங்கிகள் எவ்வாறு கடன் கொடுக்க வேண்டும் என்பது தொடா்பாக ஆா்பிஐ வழிகாட்டுதல்கள் உள்ளன. அதே நேரத்தில் தங்கள் கடன் விவரங்களை வெளியே தெரிவிக்கும் அதிகாரமும் வங்கிகளுக்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.