பொதுத் தேர்வில் 50,674 மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுதவில்லை: கி.வீரமணி வேதனை!

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,674 மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுதவில்லை என்ற நிலைமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-

இவ்வாண்டு 12 ஆம் வகுப்பு அரசு தேர்வில் 50,674 மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுதவில்லை என்ற தகவலை அறிந்து மிகப்பெரிய அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளானோம். இதில், 46 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்று அறியும்போது நமது வேதனை மேலும் அதிகரிக்கிறது. நம் மக்களுக்கு கல்வி உரிமையும், வாய்ப்புகளும் வளரவேண்டும்; பெருகவேண்டும் என்று தொடர்ந்து பாடுபடும், போராடும் ஓர் இயக்கம் என்ற முறையில் திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையை மிகுந்த கவலையுடன் பார்க்கிறது!

கடந்த ஆண்டும் இந்தப் பிரச்சினை உண்டு என்பது சமாதானம் ஆகாது; இவ்வாண்டு உச்சத்திற்குச் சென்றுவிட்டதே! கல்வி வளர்ச்சியில் நல்ல வளர்ச்சி பெற்ற தமிழ்நாட்டிலா இந்த நிலை? இதற்கான மூலகாரணத்தைக் கண்டறிந்து உரிய பரிகாரம் காணப்படுவது அவசரமும், அவசியமுமாகும். தமிழ்த் தேர்வை மறுபடியும் எழுத வைப்பது நோய்க்கான மருந்தாகாது.

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கதவு திறந்துவிடப்பட்டது. சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில், தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழ்த் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற்றாகவேண்டும் என்ற நிபந்தனை – சரியான அணுகுமுறையே! ஆனால், இதற்கான அடிப்படையாக பள்ளிகளில் தமிழ்ப்பாடம் என்பது மிக முக்கியமான ஒன்றல்லவா? இதில் காலங்கடத்தாமல், தமிழ்நாடு அரசு கல்வியாளர்களைக் கொண்டு குழு அமைத்து, உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளியைக் கண்காணித்து அவசர மருத்துவத்தை மேற்கொள்வதுபோல், இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு, குறிப்பாக நமது முதலமைச்சர் அவர்கள் செயல்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலை! இனி இது தொடராதிருக்க, வருமுன் காக்கும் முறையில் திட்டங்கள் வகுத்துச் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை, குறிப்பாக பள்ளிக் கல்வித் துறையை நாம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு வீரமணி கூறினார்.