பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்கள் பற்றி என்ன தெரியும்?: சீமான்

பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்கள் பற்றி என்ன தெரியும்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

வட இந்திய தொழிலாளர்கள் தொடர்பான போலி வீடியோ வெளியாகி சர்ச்சை கிளம்பிய நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், “தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? ” என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசியது தொடர்பான வீடியோவையும் பிரசாந்த் கிஷோர் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து சீமான் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு களங்கம் விளைவித்தல், 153 (பி)(சி), வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் (505)(1), மிரட்டல் விடுத்தல் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் துறை வழக்கு பதிவு செய்ததோடு பிரசாந்த் கிஷோரை ட்விட்டர் பதிவில் டேக் செய்தும் இந்த தகவலை தெரிவித்தது. பிரசாந்த் கிஷோருக்கு ஓடிச் சென்று தமிழக காவல்துறை அப்டேட் கொடுக்க வேண்டும் என்று என்ன அவசியமிருக்கிறது என்று விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் சென்னையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பல்லவன் இல்லம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது:-

வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருப்பதை முறைப்படுத்த வேண்டும். வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய முழு விவரமும் தமிழ்நாடு அரசிடம் இருக்க வேண்டும். ரயில்வே, என்எல்சி என மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வட மாநிலத் தொழிலாளர்கள் வருகைக்கு பின்னர் தான் தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்பதே உண்மை. கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. வட கிழக்கு மாநிலங்கள் போல், வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாடு வந்தால் நுழைவுச்சீட்டு வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும்.

வட மாநிலத்தவர்கள் தான் இதுவரை தமிழ் மக்களை தாக்கியுள்ளனர். பிரசாந்த் கிஷோர் அவரது மாநிலத்தில் கட்சி தொடங்கப் போகிறார். அதனால் பீகார் மாநில மக்களுக்கு ஆதரவாக பேசுகிறார். அவருக்கு தமிழ் மக்கள் பற்றி என்ன தெரியும். நான் தமிழன். தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன். நான் பேசிய வீடியோவை அவருக்கு அனுப்பி , அவர் அங்கிருந்து டுவிட்டரில் பதிவிட்டு, இங்கிருக்கும் காவல் துறை உடனே வழக்கு பதிவு செய்து, அவரிடம் தகவல் சொல்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். பீகாரில் இருக்கும் அவர் தான் என்பது இப்போது தான் தெரிகிறது.

பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்கள் பற்றி என்ன தெரியும்? காவிரி நதிநீர் பிரச்னை, முல்லை பெரியார் பிரச்னை, மீனவர்கள் பிரச்னை போன்றவைகளின்போது பிரசாந்த் கிஷோர் எங்கு போனார்? வட இந்தியர்கள் தான் தமிழக இளைஞர்களை தாக்குகின்றனர். வட இந்தியர்கள் வருகையால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்பதே உண்மை. அவர்களின் வருகையால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.