வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை!

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்து உள்ளது.

கொரியா தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக மிகப்பெரிய அளவிலான போர் பயிற்சியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டுப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 2 நாடுகளுக்கும் பரம எதிரியாக திகழ்ந்து வரும் வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த 12-ந் தேதி நீர் மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்கள் தாங்கிய 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவியது. இதன் தொடர்ச்சியாக 14-ந்தேதி (செவ்வாய்கிழமை) 2 குறுகிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. இதையடுத்து இன்று காலை மீண்டும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை கொரியா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரை பகுதியை நோக்கி சீறிப்பாய்ந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கியதாக தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஏவப்பட்ட மிகப்பெரிய ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தென்கொரியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு வாரத்தில் மட்டும் வடகொரியா தொடர்ச்சியாக 3 ஏவுகணை சோதனை நடத்தி மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. ஒரு புறம் வடகொரியா ஏவுகணை சோதனை மறுபுறம் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா படை நடத்தி வரும் கூட்டு பயிற்சிகள் அங்கு கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.