ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. இதில் தனிப்பட்ட சுயலாபத்துக்காக ஆளுநர் மீது பழி சுமத்தக்கூடாது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பாஜகவினரை கோபப்படுத்திய நிலையில் அதிமுக – பாஜக இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. கூட்டணி தர்மத்தை மீறி அதிமுக செயல்பட்டு வருவதாகக் கூறி பாஜகவினர் சீறினர். ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும் என அண்ணாமலையும் சாடியிருந்தார். பாஜக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்த, பதிலுக்கு அதிமுகவினர் அண்ணாமலையின் உருவப்படத்தை எரித்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்குள் சிறுசிறு சலசலப்பு இருக்கத்தான் செய்யும். பாஜகவுடனான கூட்டணி தொடரும் என அதிமுக தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், அதிமுக நிர்வாகிகள் யாரும் பாஜகவையோ அண்ணாமலையையோ விமர்சிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படியே, அதிமுகவினர், பாஜகவை விமர்சிப்பதைக் கைவிட்டுள்ளனர்.
அதேசமயம், பாஜகவினர் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில்தான் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு பாஜகவினருக்கு உத்தரவு போட்டுள்ளாராம். கடந்த 10ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்த ஜே.பி.நட்டா, அதிமுக குறித்தோ எடப்பாடி பழனிசாமி குறித்தோ யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர்களுடன் சுமுகமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பிரஸ்மீட்டில் உறுதிப்படுத்தியுள்ளார். கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவின் அடுத்தகட்ட தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணியில் சிக்கலை உருவாக்கும். இதுதொடர்பான தகவல்கள் தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு, கடந்த வாரம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரி வந்தபோது அனைத்து பாஜக தலைவர்களையும் அழைத்து இனிமேல் இதுபோன்ற எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை அளித்துள்ளார். வரும் காலத்தில் இவையெல்லாம் சரியாகி விடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை கொண்டு வரும்போது அந்த சட்டத்தில் உள்ள பிரச்சனைகள், நீதிமன்றத்தில் செல்லுபடியாகுமா என்பது போன்ற கேள்விகளை தான் ஆளுநர் கேட்டுள்ளார். உண்மை நிலையை புரிந்துகொண்டு மக்களை பாதுகாக்க வேண்டிய விஷயத்தில் தனிப்பட்ட சுயலாபத்துக்காக ஆளுநர் மீது பழி சுமத்தக்கூடாது. அரசு இதனை கௌரவப் பிரச்சனையாக பார்க்காமல் ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து சட்டத்தை பலமாக கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்ற ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதவில்லை என்பதை அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதமும், மாணவர் சேர்க்கையும் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.