வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்: ஓபிஎஸ்

வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உச்சநீதிமன்றத்தை நாடி, இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு செல்லும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பும் வந்தது. இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகள் ஆதரவு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட்டை தக்க வைத்தது, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தது அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் அணியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வலைவீசி வருகிறது. எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து நடவடிக்கைகளில் தீவிரமாக இயங்கி வரும் சூழலில், ஓபிஎஸ் தரப்பு அமைதி காத்து வருகிறது.

ஓபிஎஸ் தனது தாயின் மறைவுக்கு பின் அமைதி காத்து வருகிறார். இதனிடையே ஆதரவாளர்களை தக்க வைப்பதற்காக திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடக்கவும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியது. அதேபோல் சிவகங்கை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதேபோல் தென் மாவட்டங்கள் முழுக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமமுகவுடன் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு, வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்று தெரிவித்தார்.

பின்னர் சசிகலாவை எப்போது சந்திப்பீர்கள் என்ற கேள்விக்கு, உறுதியாக கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என்று கூறினார்.

தொடர்ந்து, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுகவினருக்கு வழங்கப்படும் அடையாள அட்டை பற்றிய கேள்விக்கு, அவர்களின் நடவடிக்கைகள் தொடக்கம் முதல் இன்றுவரை சட்டநீதிகளுக்கு புறம்பாகவே நடந்துகொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.

பின்னர் உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கேள்விக்கு, நாங்கள் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.