முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது முதிர்வு காரணமாக கடந்த மாதம் 24-ந்தேதி மரணம் அடைந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் கொட்டும் மழையில் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு சென்றார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வீட்டு வாசலில் நின்று ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார். பதிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு கை கொடுத்தார். பின்னர் இருவரும் வீட்டுக்குள் சென்றனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் தைரியமாக இருங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி பேசினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப் மற்றும் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் பண்ரூட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திடம் சிறிது நேரம் பேசிவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியே வந்த போது ஓ.பன்னீர்செல்வத்திடம் என்ன பேசினீர்கள்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவையொட்டி முதல்-அமைச்சருடன் சேர்ந்து நானும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் எங்களுடைய இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்தோம். அதற்கு அவர் நன்றி தெரிவித்தார்’ என்று கூறினார். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறிய சமயத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சிலர் ‘இளைய தளபதி’ என்று குரல் எழுப்பியபடி வந்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அவர்கள், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கொடநாடு வழக்கை விசாரிப்போம் என்று சொல்லி இருந்தீர்கள். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றும் கோரிக்கை விடுத்தனர்.