தமிழக பெண் போலீசாரின் பொன் விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் போலீசாருக்கு சலுகை வழங்கும் நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார்
தமிழகத்தில் பெண் போலீஸ் பிரிவு 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி பெண் போலீஸ் பிரிவை உருவாக்கினார். தமிழக பெண் போலீசாரின் 50-வது ஆண்டு பொன் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்புக்காக ‘அவள்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் பெண் போலீசார் சைக்கிளில் செல்லும் பேரணிக்கு அவர் பச்சைக்கொடி காட்டினார். இதைத்தொடர்ந்து தலைமை அஞ்சல்துறை அதிகாரி நடராஜன் முன்னிலையில் பெண் போலீசார் பொன் விழா சிறப்பு தபால் உறையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். விழாவில் சென்னை காவல் சிறார் மன்றத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைக்காட்சி பெட்டிகளையும் வழங்கினார். விழாவில் அவர் பேசும்போது, பெண் போலீஸ் நலனுக்காக நவரத்னமான 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதை பெண் போலீசார் கரவொலி எழுப்பி வரவேற்றனர். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மிக மிக கம்பீரமாகச் சிங்கப் பெண்களைப் போல உட்கார்ந்திருக்கும் உங்களை (பெண் போலீசார்) எல்லாம் பார்க்கும் போது, இதைப் பார்க்க தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி இல்லையே என்ற ஏக்கம்தான் எனக்கு முதலில் வந்தது. பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை சட்டம் ஆக்கியவர், கருணாநிதி. அவர்தான் தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முதலாக பெண்களும் போலீசார் ஆகலாம் என்பதை உருவாக்கி, காக்கி பேண்ட் சட்டை அணிய வைத்து பெண்கள் கையில் துப்பாக்கியையும் ஏந்த வைத்தார். அந்த துப்பாக்கியை ஏந்த வைத்தது மட்டுமல்ல, இன்றைக்கு தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 329 பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர் என்றால், இதற்கான விதையை விதைத்தவர், கருணாநிதி. இந்த நாட்டைக் காத்துக் கொண்டு இருக்கும் காவல் அரண்கள் நீங்கள். முதல்-அமைச்சர் செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணிக்காக போலீசார் நிறுத்தப்படுவது வழக்கம். நான் வேண்டாம் என்று சொன்னாலும், பாதுகாப்பு அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் பெண் போலீசாரை ரொம்ப நேரம் வெயிலில் நிற்க வைக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்று, பெண் போலீசார் சாலைகளில் இருபுறமும் நிற்க வைப்பது தவிர்க்கப்பட்டது, இது எல்லாம் உங்களுக்குத் தெரியும். பெண் காவலர்கள் மீது எனக்கு உள்ள ஒரு உணர்வுபூர்வமான, அக்கறையான வெளிப்பாடு.
கருணாநிதி தொடங்கி வைத்த ஒரு சகாப்தத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவில், அவரது மகனான நான் முதல்-அமைச்சராக வந்து கலந்துகொள்வது எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெரும் பெருமையாக, பெரும் பேறாக நான் கருதுகிறேன். இந்த பொன்விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு அவர்களையும் காவல்துறை அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன். போலீஸ்துறையில் பெண்களுக்கு பல முதன்மையான திட்டங்களைத் தந்தது தி.மு.க. அரசுதான். இந்த வரிசையில் இந்த பொன்விழா கொண்டாடும் நாளில் பெண் போலீசாருக்கு நவரத்தினம் போன்று 9 வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை தற்போது வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
* பெண் போலீசார், குடும்பத் தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான போலீஸ் பணியையும் செய்து வருவதால், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ‘ரோல்-கால்’ எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு, இனிமேல் காலை 7 மணி என்பதற்கு பதிலாக 8 மணி என்று மாற்றி அமைக்கப்படும்.
* சென்னை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் போலீசார் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்.
* அனைத்து போலீஸ் நிலையங்களிலும், பெண் போலீசாருக்கு என்று கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும்.
* பெண் போலீசார், காவல் நிலையங்களில் பணிக்கு வரும்போது, தங்களது குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வரக்கூடிய சூழலை உணர்ந்து, சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. அதை முழு அளவில் மேம்படுத்திச் செயல்படுத்தும் விதமாக விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும், காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.
* பெண் போலீசாரின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் விதமாக, பெண்களை முதன்முறையாக காவல் பணியில் ஈடுபடுத்திய கருணாநிதியின் நினைவாக, அவரது பெயரில் ”கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
* ஆண் போலீசாருடன் போட்டியிட்டு வெற்றி பெறும் இன்றைய சூழ்நிலையில், பெண் போலீசார் குடும்பத் தலைவிகளாகவும் பல பொறுப்புகளை ஆற்ற வேண்டியிருப்பதால், அவர்களது குடும்பச் சூழலுக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் வழங்குமாறு, காவல் உயர் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படும்.
* பெண் போலீசாருக்கு துப்பாக்கிச் சுடும்போட்டி தனியாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படும். அதேபோல், தேசிய பெண் போலீசாருக்கு இடையேயான துப்பாக்கிச்சுடுதல் போட்டியைத் தமிழ்நாட்டில் நடத்திட ஏற்பாடு செய்யப்படும்.
* பெண் போலீசாரின் தேவைகள், பிரச்சினைகள், செயல்திறன் பற்றி கலந்தாலோசனை செய்யும் விதமாக, ”காவல்துறையில் பெண்கள்” எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும்.
* பெண் போலீசார் தங்கள் பணிமுறையை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ளும் விதமாகவும், குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக, டி.ஜி.பி. அலுவலகத்தில் ”பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு” ஒன்று அமைக்கப்படும்.
இந்த அறிவிப்புகள் உங்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன். சட்டம்தான் உங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு. அந்த சட்டத்தை நிலைநாட்ட உங்களது திறமையும், வீரமும், கருணையும் பயன்படட்டும். தமிழ்நாடு போலீஸ்துறையின் செயல்பாடுகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான தேவையான பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் அமைதியான தமிழ்நாடு உருவாக உங்களது பணி உதவி செய்து வருகிறது. குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும். அதற்குப் பெண் காவலர்கள் பெரும் பங்கை ஆற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமை செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சீமா அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தீயணைப்புத்துறை இயக்குனர் ஆபாஷ்குமார், சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் புஜாரி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகளும், போலீசாரும் கலந்து கொண்டனர். விழா அரங்கம் முழுவதும் பெண்கள் மயமாகவே காட்சி அளித்தது. குதிரைப்படை வீராங்கனைகள், மோட்டார் சைக்கிள் வீராங்கனைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று அழைத்து வந்தனர். பேண்ட் வாத்தியம் கூட பெண் போலீசாரால்தான் இசைக்கப்பட்டது. விழாவில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு வரவேற்று பேசினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசும் வழங்கினார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சீமா அகர்வால் நன்றி கூறினார். தமிழக போலீஸ்துறையில் முத்திரை பதித்த முன்னாள் டி.ஜி.பி.க்கள் திலகவதி, லத்திகாசரண் உள்பட பெண் போலீஸ் அதிகாரிகள் விழாவுக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.