திருச்செந்தூர் முருகன் கோவிலில் மேற்கு வாசல் மூடியே இருக்கிறது.. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி தொடங்கி நிகழ்மாதம் 8 ஆம் தேதி நிறைவு பெற்றது. அதே தினத்தன்று விடையாற்றி உற்சவம் தொடங்கியது. இதன் நிறைவுநாளான நேற்றைய தினம், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் பூப்பல்லக்கில் மகிழம்பூ மாலைகள் அணிந்து பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சிறப்பு தீபாராதனை நிகழ்வில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஜான்பாண்டியன் கூறியதாவது:-
திருச்செந்தூர் கோயிலில் எங்களுக்கு பள்ளர் மடம் என்று மொத்தம் 16 மடங்கள் இருக்கின்றன.. நீங்கள் இப்போது திருச்செந்தூர் மேற்கு வாசலை பார்த்தீர்களானால் அது பூட்டப்பட்டிருக்கும்.. அது தேவேந்திர குல வேளாளருக்கு சொந்தமான மேற்கு வாசல் ஆகும். இன்றுவரை திருச்செந்தூர் கோயிலில், நாங்கள் கதிர் அறுத்து, இந்த மேற்கு வாசல் வழியாக எங்கள் சமூகத்தில் மூலம் நெற்கதிரை கடலில் கொட்டி, பொங்கல் வைத்து, அந்த பொங்கலை முருகனுக்கு சாத்தி, அந்த பொங்கலை எங்களுக்கு பிரசாதமாக பெற்றுக்கொள்வோம். இதன் அடிப்படையில் நடக்கின்ற விழாதான், மேற்கு வாசல் விழா ஆகும்.. பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் உரிமை பறிக்கப்பட்டு தற்போது வரை, மேற்கு வாசல் திருவிழா நடைபெறாமல், மேற்கு வாசல் மூடியே இருக்கிறது. எனவே, இது தொடர்பாக முதலமைச்சரை ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த போகிறோம். கிராம மக்களை அழைத்து சென்று உரிமைகளை பெறுவதற்காக பேசவிருக்கிறோம். நிச்சயம் இதற்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.