‘சமூகத்துக்கு பயன் அளிக்கும் ஆராய்ச்சிகளை விளையாட்டு துறையில் மேற்கொள்ள வேண்டும்’ என தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.சுந்தர் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் 2019-2022-ம் ஆண்டு வரையிலான கல்வி ஆண்டில் பி.பி.இ.எஸ். எனப்படும் இளங்கலை உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி கே.சுஷ்மிதா உள்ளிட்ட 107 ஆராய்ச்சி மாணவர்கள், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த 58 மாணவ-மாணவிகள் கவர்னரிடம் இருந்து பட்டங்களைப் பெற்றனர்.
மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் விழாவில் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த உலகில் விளையாட்டுக்கும், மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. விளையாட்டுதான் நட்பையும், அடையாளத்தையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கிறது. அதேபோன்று விளையாட்டு, உடல் நலனைப் பாதுகாக்கிறது, ஒழுக்கத்தை கற்றுத்தருகிறது, ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. விளையாட்டில் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்கு செல்ல உதவுகிறது. என் பள்ளிப்பருவத்தில் நான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தேன். என் பள்ளித்தோழர்கள், பள்ளிக்கு உள்ளே 4 சுவற்றுக்குள் விளையாடினர். நான் அதை கடந்து பல பகுதிகளுக்கு சென்று விளையாடினேன். அதுவே எனக்கு சவால்களை எதிர்கொள்ள கற்றுக்கொடுத்தது. விளையாட்டில் ஏற்படும் தோல்விகளை, அணியின் ஒற்றுமையை கொண்டு மீண்டும் வெற்றி பெற செய்ய முடியும். அதுவே அரசியலில் இன்று எனக்கு உதவுகிறது.
கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு இளம் வீரர்களை அடையாளம் காண திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி கோப்பையை வென்றது. அதேபோன்று காமன்வெல்த் போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்றுள்ளது. தாமஸ் கப் போட்டியில் 73 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கம் வென்றுள்ளது. இப்போது, விளையாட்டாக இருந்தாலும், படிப்பாக இருந்தாலும் அந்த சாதனையாளர்கள் 10 பேரில் 7 பேர் பெண்களாக உள்ளனர். எல்லா துறைகளிலும் பெண்கள் தலைசிறந்து விளங்குகின்றனர். இன்று பட்டம் பெற்றவர்களிலும் பலர் பெண்களாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களின் வளர்ச்சியே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும்.
விளையாட்டு வீரர்களின் திறமையை ஊக்கப்படுத்தும் வகையில் தேசிய அளவில் நடத்தப்படும் கேலோ இந்தியா போட்டியில் கடந்த ஆண்டு 12 புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. இதில் 11 சாதனையை முறியடித்தது பெண்கள் தான். சமூகத்துக்கு பயன் அளிக்கும் ஆராய்ச்சி இந்த ஆண்டு நடந்த கேலோ போட்டியில் 25 சாதனை முறியடிக்கப்பட்டது. இதில், 21 சாதனை, பெண்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகும். உடற்கல்வியியலில் யோகா மற்றும் அதன் துணைப்பாடங்களில் ஆராய்ச்சி என்பது அதிகரித்துள்ளது. விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து நாட்டுக்கும், சமூகத்துக்கும் பயன் அளிக்கும் ஆராய்ச்சிகளை தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான உதயநிதி ஸ்டாலின், கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.