வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு முதல் வைக்கம் வரை பேரணி நடத்த இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் வைக்கம் எனும் ஊரில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது. இந்நிலையை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூட யாரும் தயாராக இல்லாத நிலையில், கேரளாவில் புரட்சியை ஏற்படுத்திய ஸ்ரீ நாராயணகுருவின் சீடரும், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்தவருமான டி. கே. மாதவன் என்பவர் இப்பிரச்சனைக்காகப் போராட முன் வந்தார். அவர் காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவர்களை ஒன்று திரட்டினார். அந்தவகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தந்தை பெரியார் அப்போரட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
இந்தநிலையில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா வருகிற 28ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தந்தை பெரியாரின் பங்களிப்பை நினைவுகூறும் வகையில், அவர் பிறந்த மண்ணான ஈரோட்டில் இருந்து வைக்கம் வரை பேரணி நடத்த இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நேற்று மதுரையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலையில், 300க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரசில் இணைந்தனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வைக்கம் நூற்றாண்டு விழா வருகிற 28ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில், ஈரோட்டில் இருந்து வைக்கம் வரை பிரம்மாண்ட ஊர்வலத்தை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. கேரள காங்கிரஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் இணைந்து இந்த பேரணியை நடத்த இருக்கிறது. வருகிற 28ஆம் தேதி ஈரோட்டில் இருந்து துவங்கும் இந்த பேரணி, 30ஆம் தேதி வைக்கம் சென்றடையும். அதற்கான ஏற்பாடுகளை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமைலான குழு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த பேரணியை நான் துவக்கி வைக்கிறேன். அந்தப் பேரணி வரலாற்று சிறப்புமிக்க பேரணியாக அமையும்.
தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பொழுது வைக்கதில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டார். அங்கேயே தங்கியிருந்து போராட்டம் நடத்தினார், சிறை சென்றார். அந்த போராட்டத்தில் காந்தியும் பங்கேற்றார். எனவே அந்த நினைவை போற்றுகிற வகையில் ஈரோட்டில் இருந்து வைக்கதிற்கு பேரணி நடைபெற இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அதானி குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு விவாதம் செய்யவிடாமல் மத்திய பாஜக அரசு தடை போடுகிறது. அதானி என்பவர் வெறும் பொம்மைதான், அவரை இயக்குவதே மத்திய அரசுதான். அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு அவர்களே எப்படி விவாதிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.