பெண்களுக்கு நிலுவைத் தொகையான ரூ 28 ஆயிரத்தை சேர்த்து ரூ 29 ஆயிரமாக வழங்க வேண்டும்: அண்ணாமலை

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கும் போது நிலுவைத் தொகையான ரூ 28 ஆயிரத்தை சேர்த்து ரூ 29 ஆயிரமாக வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இன்று சட்டசபையில் 145 அறிவிப்புகள் வெளியாகின. அதில் அனைவரும் எதிர்பார்த்த அறிவிப்புகள் இரண்டுதான். ஒன்று மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை, மற்றொன்று சிலிண்டருக்கு ரூ 100 மானியம். இந்த நிலையில் மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த உரிமைத் தொகை தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ 1000 உரிமைத் தொகை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் கொடுக்கப்படும் என கூறியுள்ளார். இன்னம் 6 மாதங்களில் இந்த திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். சில விதிமுறைகளை வைத்து அதற்குள் வரும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 கிடைக்கும் என தெரிகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. திமுக தேர்தல் அறிக்கை அனைத்து மகளிருக்கும் ரூ 1000 உரிமைத் தொகை என சொல்லிவிட்டு தற்போது தகுதி வாய்ந்த மகளிருக்கு என மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.