விருதுநகரில் ரூ.2 ஆயிரம் கோடியில் ‘மெகா’ ஜவுளி பூங்கா தொடக்க விழா!

விருதுநகரில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைய உள்ள ‘மெகா’ ஜவுளி பூங்கா தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த பூங்காவில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 11 நிறுவனங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியூஸ் கோயல் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்தியாவில் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் மாநில அரசுடன் இணைந்து பிரதமரின் மித்ரா பூங்கா எனப்படும் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்கா அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் பகுதியில் ஆயிரத்து 52 ஏக்கர் சிப்காட் நிலத்தில் ரூ.2 ஆயிரம் கோடியில் இந்த ஜவுளி பூங்கா அமைய உள்ளது. இதன் தொடக்க விழா தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் சார்பில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடந்தது.

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் ரச்சனா ஷா வரவேற்றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் வர்த்தகம், தொழில்துறை மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் முன்னிலையில் இந்த ஜவுளி பூங்காவில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு வழிகாட்டு நிறுவனமும், 4 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் துணி நூல் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம் ரூ.1,231 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 6 ஆயிரத்து 315 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

விழாவில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசியதாவது:-

இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஜவுளித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மெகா ஜவுளி பூங்காவை பெற இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. தமிழக அரசின் சிறப்பான பணி காரணமாக ஜவுளி பூங்காவை தமிழகம் பெற்றுள்ளது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக 4 கோடி பேருக்கு நேரடியாகவும், 6 கோடி பேருக்கு மறைமுகமாகவும் ஜவுளித்துறை வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஜவுளிக்கான நூலை உருவாக்குவது, ஆடையாக உருவாக்குவது, வடிவமைப்பது, ஏற்றுமதி செய்வது என ஜவுளித்துறை பணிகள் பல்வேறு கட்டங்களாக நடக்கின்றன. அதுவும் வெவ்வேறு இடங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரே இடத்தில் கொண்டு வரும்போது ஆடையை உருவாக்குவதற்கான செலவு வெகுவாக குறையும். அதேநேரத்தில் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டுதான் இதுபோன்ற பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த 7 பூங்காக்கள் மூலம் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி முதலீடுகளை பெற முடியும். இதுதவிர 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய ஜவுளி மற்றும் ரெயில்வே துறை இணை மந்திரி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி எல்.முருகன், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஆர்.காந்தி, தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் தலைவர் ரவி ஷாம், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் ஆகியோர் பேசினர். விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பெரியகருப்பன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சிப்காட் மேலாண்மை இயக்குனர் சுந்தரவல்லி, தியாகராஜா மில்ஸ் குழுமத்தின் செயல் இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். முடிவில், தமிழக அரசின் தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.