சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் கைது செய்யப்பட்டதற்கு சீமான் கண்டனம்!

பெண்களை இழிவு செய்ததாக சவுக்கு சங்கர் ஆதரவாளர் பிரதீப் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இது தொடர்பான அறிவிப்பில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் – பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்திற்காக, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

சமூக வலைதளங்களில் இந்த ரூ1,000 உரிமைத் தொகை திட்டத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர் கிண்டலடித்தும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக மகளிர் ஆணையத்தின் தலைவர் AS.குமாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் @voiceofsavukku என்ற டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு வந்த பிரதீப் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். @voiceofsavukku என்ற பெயரில் யூடியூபர் சவுக்கு சங்கர் என்பவரை ஆதரித்து பல்வேறு பதிவுகளை தொடர்ர்ந்து வெளியிட்டவர் பிரதீப். பிரதீப் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பை திரைப்பட நகைச்சுவைத் துணுக்கோடு பொருத்தி இணையத்தில் விமர்சித்ததற்காக பிரதீப் எனும் இளைஞரைக் கைதுசெய்திருப்பது ஏற்புடையதல்ல. மாற்றுக்கருத்துடையோரையும், அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரையும் அரசியல் எதிரிகளாகக் கட்டமைத்து, அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தேர்தல் அறிக்கையில், தமிழகத்திலுள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்; இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பயனடைவார்கள் எனக் கூறிவிட்டு, இப்போது தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை என திமுக அரசு மாற்றிப்பேசி, தகுதி எனும் சொல்லாடலை புதிதாக இடைச்செருகும்போது எழும் விமர்சனத்தைத்தான் திரைப்படத்தின் நகைச்சுவைக்காட்சியோடு இணைத்து எள்ளல் செய்திருக்கிறார் தம்பி பிரதீப். கேலிச்சித்திரங்களின் நவீனப்பரிணாம வளர்ச்சிதான் இதுபோன்ற காணொளி நகைச்சுவைத்துண்டுகள். அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காகவே கைது நடவடிக்கை என்பது மிக மிக அதீதமானது. சமூகத்தைப் பிளவுபடுத்தும், மண்ணுக்கும், மக்களுக்கும் பெருங்கேட்டை விளைவிக்கும் எத்தனையோ பேரைக் கைதுசெய்ய மறுக்கும் திமுக அரசு, எளிய மக்களின் விமர்சனங்களைச் சகிக்க முடியாது, அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்த எண்ணுவது சனநாயக விரோதமாகும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.