சட்டசபையில் பேச ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு!

ஆன்லைன் தடை சட்டம் மசோதா குறித்து சட்டசபையில் பேச ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ஆவேசமாக பேசியதால் சட்டசபையில் களேபரம் ஏற்பட்டது.

பொதுவாக சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி இடையேதான் சச்சரவுகள் எழும். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தேமுதிகவினரும் அதிமுகவினரும் மாறி மாறி பேசி ஒரு கட்டத்தில் விஜயகாந்த் நாக்கை மடித்து பேசியது இன்றைக்கும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதே போல திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் இடையே அவ்வப்போது உரசல்கள் எழும். இன்றைய தினம் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் ஒருவருக்கொருவர் காரசாரமாக பேசி களேபரத்தை ஏற்படுத்தி விட்டனர்.

மசோதா ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து சட்டசபையில் பேசினார். இந்த மசோதா மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ வேல்முருகன், கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, சிபிஎம் எம்.எல்.ஏ., நாகை மாலி, பாஜக குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக குழுத்தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் ஆகியோர் பேசினர்.

இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பேச சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா விவாதம் இன்றி ஏக மனதாக நிறைவேற வேண்டும் என தான் விரும்புவதாக கூறினார். தொடர்ந்து அவர் அதிமுக சார்பில் இந்த மசோதாவை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கட்சிக்கு ஒருவர் பேச வேண்டும் என்று சொன்னீர்கள். எனது சார்பாக தளவாய் சுந்தரம் பேசினார். பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அதுதான் எதிர்க்கட்சி என்று கூறினார்.

இதனையடுத்து சட்டசபையில் அதிமுகவினர் இரு தரப்பினரும் எழுந்து நின்று முழக்கமிட்டனர். மேலும் அதிமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே ஓபிஎஸ்-க்கு மசோதா மீது பேச வாய்ப்பு கொடுத்ததாக சபாநாயகர் மீது எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களும் சபாநாயகர் இருக்கை அருகே சென்று முழக்கமிட்டனர். இதன் காரணமாக சட்டசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பாண்டியன் ஒரு கட்டத்தில் வேட்டியை மடித்து கட்டி அதிமுக வினருடன் வாதத்தில் ஈடுபட்டார். ஓபிஎஸ் தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என தெரிவித்தார். அது இன்னும் மாற்றப்படவில்லை என்று கூறினார். தேர்தல் ஆணையத்திலும் அவர்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதிவு உள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கியவர்கள் தானே நீங்கள் என கடுமையாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு , ஓ.பன்னீர் செல்வம் முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் தான் அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டதாக கூறினார். ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இருக்கையை விட்டு எழுந்து செல்லவே, இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களும் இருக்கை விட்டு எழுந்து சென்றனர். அவர்களை கே.பி. முனுசாமி சமாதானப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், பிரதான எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மூத்த உறுப்பினர், முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில்தான் ஓபிஎஸ்க்கு அனுமதி வழங்கினேன் என்று தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இது மரபை மீறிய செயல் அப்படி ஒரு விதி பேரவையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இதனால் சிறிது நேரம் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து அதிமுகவினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.