பிரதமர் மோடி ஒரு கோழை. இதை நான் மீண்டும் மீண்டும் சொல்வேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு பேசியதால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த 23ம் தேதி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்பி தகுதி பறிக்கப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. மக்களவை பிரதிநிதித்துவ சட்டத்தின் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி, இனி 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடதக்கது.
இந்தநிலையில் ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய செயல்பாடுகளை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸார் போராட்டக் கோரிக்கையை காவல்துறை நிராகரித்ததை அடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் டெல்லி ராஜ்காட் வெளியே சத்யாகிரகம் நடத்தினர். அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது:-
ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பது நாட்டுக்கும், அதன் ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல என்பதால், அராஜக அரசுக்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. எங்கள் குடும்பத்தின் ரத்தம், நாட்டின் ஜனநாயகத்தை வளர்த்துள்ளது. நாட்டின் ஜனநாயகத்துக்காக நாங்கள் எதையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். இந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு அடித்தளம் போட்டவர்கள், காங்கிரசின் மாபெரும் தலைவர்கள்தான். அவர்கள் (பா.ஜ.க.வினர்) எங்களை மிரட்டலாம் என கருதினால், அது தவறு. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். இனியும் நாங்கள் அமைதி காக்க மாட்டோம்.
நாட்டுக்காக தியாகம் செய்த பிரதமரின் மகன் நாட்டை அவமதிப்பாரா? தனது உயிரையே ஈந்த பிரதமருக்கு இது அவமதிப்பு. நீங்கள் (பா.ஜ.க.) தியாகியின் மகனை தேசவிரோதி என்கிறீர்கள். அவரது தாயாரை நாடாளுமன்றத்தில் அவமதித்தீர்கள். பிரதமரே, ஏன் இந்த குடும்பம் நேரு என்ற பின்பெயரை பயன்படுத்துவதில்லை என்று கேள்வி கேட்கிறார். நீங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அவமதித்தீர்கள். இன்றைக்கு வரையிலும், எங்கள் குடும்பத்தை அவர்கள் அவமதித்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அமைதி காத்து வந்தோம். இனி அப்படி இருக்க மாட்டோம்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் லட்சோப லட்சம் பேர் இணைந்தார்கள்.நாட்டின் ஒற்றுமைக்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும் நடைப்பயணம் மேற்கொண்ட ஒருவர் இந்த நாட்டை அவமதிப்பாரா? ராகுல் காந்தி உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். ஆனால் அவரை இன்னும் பப்பு என்று அழைக்கிறார்கள். ஆனால் அவர் பப்பு இல்லை, லட்சக்கணக்கான மக்கள் அவருடன் நடக்கிறார்கள் என்பதைக் கண்டதும், நாடாளுமன்றத்தில் அவர் கேள்விகளை எழுப்பியதைப் பார்த்தும், அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. கேள்வி கேட்கிற ஒருவர் தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டால், அது நாட்டுக்கு நல்லதல்ல. ஜனநாயகத்துக்கும் சரியல்ல. பயப்படாதீர்கள். அவர்களை எதிர்கொள்வதற்கான நேரம் வந்து விட்டது. ஒன்றுபடுவோம். நாட்டின் ஒற்றுமையை உறுதி செய்வோம். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
அதைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-
ஓபிசி சமூகத்தை அவமதித்ததாக கூறி ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடி ஓபிசியா? மெகுல் சோக்ஸி ஓபிசியா? லலித் மோடி ஓபிசியா? அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடியவர்கள். கறுப்புப் பணத்துடன் தப்பியோடியவர்கள் விவகாரத்தை மட்டுமே ராகுல் காந்தி எழுப்பினார். நாடு முழுவதும் இதுபோன்ற நூற்றுக்கணக்கான போராட்டங்களை காங்கிரஸ் நடத்தும். பேச்சு சுதந்திரத்தை காக்க போராடுவோம். ராகுல் காந்தியுடன் நின்ற அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.