அதிமுகவை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது: எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண விழாவில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமாகா தலைவர் ஜிகே வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி காப்பாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழ்நாட்டு மக்களுக்கு உணவளிப்பது டெல்டா மாவட்டங்கள். அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு ஆட்சியில் உள்ள திமுக அரசு நேர கட்டுப்பாடு விதிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படுகிறது. விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் என்று பாடுபடும் கட்சி அ.தி.மு.க., தான். நெற்பயிர் சிறப்பாக வளர வேண்டும் என்றால், நடவுப் பணிகள் முடிந்த சில குறிப்பிட்ட காலங்களில் பயிர்களுக்கு இடையே உள்ள களைகள் எடுக்கப்படும். அப்படியாக அதிமுகவில் இருந்த களைகள் எடுக்கப்பட்டு விட்டது. இனி அதிமுக என்னும் பயிர் நன்றாக வளர்ந்து விளைச்சல் கொடுக்கும். அதிமுகவில் எப்போதும் தனி மனிதன் ஆதிக்கம் என்பது இல்லை. அதிமுக தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி. நான் என்றும் தலைவன் என்ற வார்த்தையைச் சொன்னது கிடையாது. நான் என்றைக்கும் தொண்டன் என்று தான் சொல்கிறேன். நான் தொண்டனோடு தொண்டனாக பணியாற்றி வருகிறேன்.

ஒன்றரைக் கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவில் என்னைப்போல ஒரு லட்சம் பழனிசாமிகள் உள்ளனர். இந்த பழனிசாமி இல்லாவிட்டால் யாராவது ஒருவர் அதிமுகவை நடத்துவார்கள். தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் இந்தக் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது. தொண்டர்களால் வளர்ந்து, உருவான கட்சி அதிமுக. இதை யாரும் உரிமை கொண்டாட முடியாது. தொண்டனின் உழைப்பால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.