மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை பதவியலிருந்து நீக்கியிருப்பது ஜனநாயக விரோதம்: சீமான்

மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை அவர் வகித்த பதவியலிருந்து நீக்கியிருப்பது ஜனநாயக விரோதம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை அருகே கட்சியின் குருதிக்கொடை பாசறை அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் குடும்பமே எங்கள் இனத்தை கொன்று குவித்தது. இதை எளிதில் மறந்துவிட முடியாது. அந்த கோபமும் வலியும் இன்னமும் இருக்கிறது. ஆனால் ராகுல் காந்தியை வீழ்த்த பதவி பறிப்பு என்பது சரியான நடைமுறை அல்ல. மக்கள் ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்கள் கொடுத்த ஒரு பதவியை இப்படி பறிப்பது ஜனநாயக படுகொலையாகும். அவதூறு வழக்கில் அவருக்கு சிறை தண்டனை கொடுத்தது வேடிக்கையானது. ஏனெனில் இதைவிட மோசமாக பாஜக நிர்வாகிகள் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மோடியே இதுபோன்ற பேசியிருக்கிறார். இந்த விஷயத்தில் சாமானிய மக்களுக்கு இருக்கும் சட்டம்தான் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. சட்டம் இவ்வளவு கறாராக பின்பற்றப்படுகிறதெனில் நீரவ் மோடி, லலித் மோடி உள்ளிட்டோர் மீது இதேபோல கறாராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இவ்வளவு பெரிய அரசியல் பின்னணி இருக்கும் ராகுல் காந்திக்கே இந்த நிலைமை எனில் சாதாரண மக்களின் நிலை என்ன ஆகும்? இனி வரும் காலங்களில் மக்களாட்சி ஜனநாயகம் என்கிற அமைப்பு இருக்குமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது.

எல்லா வடிவங்களிலும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். ஏற்கனவே, ஒரு முறை நிராகரித்துவிட்டார். எனவே இந்தமுறை அவர் கையெழுத்திட்டே தீர வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம் ஆளுநருக்கு எப்படி வருகிறது? முதலில் அவர் யார்? அவரது வேலை என்ன? அவரது அதிகாரம் என்ன? அந்த பதவி எதற்கு? எட்டு கோடி மக்கள் தேர்வு செய்த அரசு கொண்டு வரும் மக்கள் நலன் திட்டத்தையும், சட்டத்தையும் ஏற்க முடியாது, ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூற ஆளுநர் யார்.. இதெல்லாம் கொடுமை.. ஆளுநர் நியமனத்தில் மாநில அரசின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். என்னைக் கேட்டால் ஆளுநர் நியமனமே அவசியமில்லை என்று தான் சொல்வேன். என்னைக் கேட்டால் அரசு ஆளுநரை மதிக்காமல் செல்ல வேண்டும். அப்படிப் போனால், என்ன செய்து விடுவார்கள். ஆளுநருக்கு ஏக்கர் கணக்கில் மாளிகை, பாதுகாப்பு சம்பளம் தருவது எல்லாம் வீண் செலவு. இவ்வாறு அவர் கூறினார்.