தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் ஆதரவு தர வேண்டும்: ராமதாஸ்

தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னை தியாகராயநகர் பாண்டி பஜார் சாலையில் கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் தமிழைத் தேடி இயக்கம் சார்பில் தனித்தமிழ் சொற்கள் அறிவோம் எனும் தூய தமிழ்ச்சொற்கள் பதிக்கப்பட்ட பதாகையை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று திறந்துவைத்தார். மேலும் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைக்கக்கோரி உரிமையாளர்களுக்கு துண்டுப்பிரசுரங்களை அவர் வழங்கினார். ‘பொன்னி அங்காடி’ என்று பெயர்ப்பலகை வைத்திருந்த கடை உரிமையாளருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

வணிகர்கள் கடல் கடந்து வியாபாரம் செய்யும்போது தமிழை வளர்த்தார்கள். எனவே அவர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். தமிழ் தற்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் தமிழே இருக்காது. ஒரு மாத காலத்தில் எல்லோரும் பெயர்ப்பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். அப்படி வைக்கவில்லை என்றால் கருப்பு மை வாளியோடு வருவேன் என்று சொன்னேன். ஒரு மாத அவகாசம் உங்களுக்கு தேவைப்படாது. ஏனென்றால் வணிகர்கள் அனைவரும் தமிழ் விரும்பிகள். தனித்தமிழில் பெயர் வைத்தால் என் கையாலே பூச்செண்டு கொடுத்து பாராட்டுவேன்.

பசு கன்றுகூட அம்மா என்று அழைக்கிறது. நாம் மம்மி டாடி என்று சொல்லி தமிழை அழித்துவருகிறோம். இது சென்னை மாதிரி தெரியவில்லை. லண்டன் மாதிரிதான் தெரிகிறது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. தமிழை தமிழ்நாட்டிலே தொலைத்து விட்டு நம்மை அறியாமலேயே நமது தாய்மொழியை அழித்துக் கொண்டிருக்கிறோம். சவுந்தரபாண்டியனார் தெரு என்று இருந்த பெயரை நாம் எல்லோரும் சேர்ந்துதான் பாண்டி பஜார் என மாற்றினோம். கடந்த மாதம் தமிழைத் தேடி சென்னையில் இருந்து மதுரை வரை பயணம் செய்தேன். அப்போது தமிழை எங்கும் பார்க்க முடியவில்லை. 2015-ல் தமிழில் பெயர்ப்பலகைகளை வைக்க வேண்டும் என்று துண்டுப்பிரசுரம் கொடுத்தோம். ஆனால் எந்த பயனும் கிடைக்காததால் மீண்டும் இதை செய்கிறோம். வணிகர்கள் அனைவரும் இந்த முயற்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.