டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி!

தமிழ்நாட்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இரவு பகலாக படித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பலரும் தயாராகின்றனர். தமிழ்நாட்டில் குரூப் 4 எழுத்துத் தேர்வு 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/Home.aspx) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. குரூப் 4 தேர்வு நடைபெற்று 8 மாதங்களுக்குப் பிறகு மார்ச் 24ஆம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், அதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 தேர்வர்கள் தேர்ச்சி என தகவல் வெளியாகியுள்ளது. அந்த, குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பயின்ற விருத்தாச்சலம் மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். குரூப் 4 தேர்வில் முதல் 11 இடங்களில் ஆறு இடங்களை குறிப்பிட்ட தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு பயிற்சி மையத்திலிருந்து அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம் பரவலாக தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே, தங்கள் தேர்வு மையத்திலிருந்து 2,000 பேர் தேர்வானது உண்மைதான் என்று அந்த பயிற்சி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தேர்வான நபர்களின் பட்டியலை அளிக்கவும் தயார் என்றும் முறையான பயிற்சி அளித்து அதிக நபர்களை குரூப் 4 தேர்வில் வெற்றி பெற செய்துள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின்னர் நேரமில்லா நேரத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் போட்டி தேர்வு எழுதிய, அடுத்தடுத்த பதிவெண் கொண்ட 700க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். அதே போல் தென்காசியில் ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற சுமார் 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது என்று எடப்பாடி ப்ழனிசாமி கூறினார்.

மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ நாகை மாலி, தவாக தலைவர் வேல்முருகன் ஆகியோரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்துப் பேசிய நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இந்த முறைகேட்டுப் புகார் தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலாளாரை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விரிவான விளக்கம் கேட்க உத்தரவிட்டுள்ளேன். கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் இது போன்ற புகார்கள் வந்துள்ளதா, அதற்கும் இதற்கும் என்னென்ன ஒற்றுமை வேற்றுமை இருக்கின்றன என்பது குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. அந்த விளக்கம் வந்ததும் தருகிறேன்” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஊழல்கள் நடைபெற்று இருப்பதாக எந்தவித ஆதாரம் இன்றி எதிர்க்கட்சி தலைவர் பேசி இருக்கிறார். எனவே அந்த சொற்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் இந்த அவையிலே நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.