கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டசபையில் இன்று மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கான சமூக பொருளாதாரத்தை மீட்க எவ்வளவோ தலைவர்கள் வந்தாலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது. பெண்களின் விலைமதிப்பில்லா உழைப்பு கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. ஒரு ஆணுடைய வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, சமூகத்திற்காகவும் எத்தனை மணி நேரங்கள் அவர்கள் உழைத்திருப்பார்கள். அவர்களுக்கான ஊதியம்தான் இது. ஆண்கள் அங்கீகரித்தால் பெண்களுக்கான சமூக உரிமை வழங்கிடும் நிலை உருவாகும் என இந்த அரசு நம்புகிறது. பல்வேறு வகைகளில் விலைமதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்.
நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலை கடற்கரை விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் சொற்ப ஊதியங்களில் வேலை செய்திடும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணியாற்றும் மகளிர் என பலரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். ஏறத்தாழ ஒரு கோடி மகளிர் இந்த திட்டத்திற்கான முதல் நோக்கம் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது தான். இரண்டாவது நோக்கம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும். இதனை செய்ய முடியுமா, நிதி இருக்குமா என்று கேள்வி எழுப்பி, அச்சத்தை வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதி திட்டங்களிலேயே மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் விளங்க மகத்தான மகளிர் உரிமை தொகை வழங்கக் கூடிய திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அமைந்திடும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.